சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தினசரி மின் தேவை 11 ஆயிரம் மெகாவாட்டாகக் குறைந்துள்ளது. தமிழகத்தில் தினசரி மின் தேவை சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. கோடைகாலத்தில் 20 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும். அதிகபட்சமாக கடந்த 2024 ஆண்டு மே 2-ம் தேதி தினசரி மின் தேவை 20,830 மெகாவாட்டாகப் பதிவானது.
இந்தாண்டு அதிகபட்சமாக கடந்த ஏப்.24-ம் தேதி 20,148 மெகாவாட் மின் தேவை பதிவானது. கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக மின் தேவை எப்படி அதிகரிக்கிறதோ, அதேபோல், மழை மற்றும் குளிர் காலங்களில் மின்சாரப் பயன்பாடு குறைந்து, மின் தேவையும் குறைவது வழக்கம்.
மின்நுகர்வு 10,923 மெகாவாட்: இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மின் தேவையும் குறைந்துள்ளது. கடந்த 19-ம் தேதி மின் தேவை 12,557 மெகாவாட்டாகவும், 20-ம் தேதி தீபாவளி அன்று 10,923 மெகாவாட்டாகவும் இருந்தது.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மின்சாரப் பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளது. பொதுவாக, பருவமழையின்போது மின் பயன்பாடு 50 சதவீதம் குறையும். மேலும் தீபாவளியையொட்டி கடந்த 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பெரும்பாலான அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மின் நுகர்வு குறைவாக இருந்தது.
50% உற்பத்தியே போதுமானது: பொதுவாக, தமிழகத்தில் சென்னை நகரில் அதிகபட்ச மின்தேவை இருக்கும் நிலையில், பலர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் சென்னையின் மின்தேவை குறைந்துள்ளது. தற்போதுள்ள சூழலில், அனல் மின் நிலையம் மற்றும் பிற மின் உற்பத்தி நிலையங்களில் 50 சதவீத உற்பத்திகூட மின்தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.