தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.16, 18 தேதிகளில் தொடங்க வாய்ப்பு | Oct.11th Heavy Rain Chances at 11 Districts at TN: North East Monsoon at Coming Week

Spread the love

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.16, 18-தேதிகளில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், நாளை (அக்.11-ம் தேதி) கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தென்மேற்கு பருவமழை வரும் அக்.16 முதல் அக்.18ம் தேதிகளில் இந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

அதே சமயம், வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசை காற்று வீசக்கூடிய நிலையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்.16 முதல் 18 தேதிகளில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (அக்.11ம் தேதி) பெரும்பாலான இடங்களிலும், அக்.12 முதல் 16ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை (அக்.11ம் தேதி) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அக்.12ம் தேதியில் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும், அக்.13ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (அக்.11ம் தேதி) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை (அக்.11ம் தேதி) சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் பாலாறு அணைக்கட்டு, ஆற்காடில் தலா 12 செ.மீ மழை, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கடவனூரில் தலா 11 செ.மீ மழை, திருவண்ணா மலை மாவட்டம் தண்டராம்பட்டு, ஆரணி, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம், ராணிப்பேட்டையில் தலா 9 செ.மீ மழை, விழுப்புரம் மாவட்டம் செம்மேடு, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா, கரூர் மாவட்டம் ஆனைப்பாளையம், ஈரோடு மாவட்டம் குண்டேரிப் பள்ளம், கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *