சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் வரும் 16, 17ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. வடமாவட்டங்களில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காயல்பட்டணம், திருச்செந்தூரில் தலா 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வரும் 18 ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். மேலும் வரும் 24 ஆம் தேதி வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இவை மேலும் வலுவடையலாம். ஆனால் இப்போது இதை கணிக்க முடியாது.
இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அக் 17 ஆம் தேதி (நாளை) விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக் 18 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக் 19 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், 20 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அக்., 20 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான – கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.