“தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம்!” – தமிழக பாஜக | TN BJP condemns CM Stalin

1316183.jpg
Spread the love

சென்னை: விரைவில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் இருக்கும் என தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றம் தொடர்பான முதல்வரின் கருத்தை விமர்சித்து அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என முதல்வர் சொல்லியது, ஊழல் பணத்தை சேர்த்துக் கொண்டிருக்கும் திமுக அமைச்சர்கள், சந்தர்ப்பவாத திமுக கூட்டணி அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு மகிழ்ச்சியளிக்கும். ஆனால் மக்கள் விரோத ஆட்சியில் இந்த முறையாவது அமைச்சரவை மாற்றம் மூலம் நல்லது நடக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கும் மக்களுக்கு மட்டும் ஏமாற்றம் தான் இருக்கும் என்பதை தனக்கே உரிய பாணியில் முதல்வர் சூசகமாக சொல்லி உள்ளார்.

வடசென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையை அலங்கோலப்படுத்தி, மன்னராட்சியை நினைவுபடுத்துவது போல் அனைத்து துறைகளையும் இயக்கி கார் ரேஸ் நடத்தியதன் மூலம் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர் என்பதை அமைச்சர் உதயநிதி தமிழக மக்களுக்கு முழுமையாக உணர்த்திவிட்டார். அதனால் அவர் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டாலும் மூன்றாண்டு காலம் மக்கள் விரோத திமுக ஆட்சியில் என்ன நடந்ததோ அதேதான் இனியும் நடக்கும் என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர்.

எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியிலும், தமிழக ஆட்சியிலும் மாற்றம் இருக்க வேண்டும் என்று திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்கள் விழிப்புடன் வாக்களிக்க காத்திருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்று விரும்பும் கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். விரைவில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் இருக்கும் தமிழக மக்களுக்கு ஏமாற்றம் இருக்காது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *