தமிழகத்தில் 10 மெமு ரயில்களில் தற்காலிகமாக பெட்டிகள் குறைப்பு | Coaches reduced in 10 MEMU trains in TN due to demand for Kumbh Mela special trains

1344156.jpg
Spread the love

சென்னை: கும்பமேளா விழாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க அதிக பெட்டிகள் தேவைப்படுவதால், தமிழகத்தில் 10 மெமு ரயில்கள் தற்காலிகமாக 10 பெட்டிகளாக குறைத்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா விழா வரும் ஜனவரி 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. இதற்கு அதிக அளவில் ரயில் பெட்டிகள் தேவைப்படுகின்றன. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில்களில் பெட்டிகளை குறைத்து, அவற்றை கும்பமேளா சிறப்பு ரயில்களில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை கடற்கரை – திருவண்ணாமலை (வண்டி எண் 06033), விழுப்புரம் – சென்னை கடற்கரை (06722), திருவண்ணாமலை – தாம்பரம் (06034), தாம்பரம் – விழுப்புரம் (06721), சென்னை எழும்பூர் – புதுச்சேரி (06025/26), தாம்பரம் – விழுப்புரம் (06727/28), புதுச்சேரி – திருப்பதி (16112/11) ஆகிய 10 மெமு ரயில்கள் தற்காலிகமாக 10 பெட்டிகளாக குறைத்து இயக்கப்படும்.

பெட்டிகள் குறைக்கப்பட்டு உள்ளதால் விழுப்புரம் – சென்னை கடற்கரை மெமூ ரயில் (06722) வரும் 26-ம் தேதி முதல் தாம்பரம் – கடற்கரை இடையே மெயின் லைனில் இயக்கப்படும். இதனால், கிண்டி, மாம்பலத்தில் மட்டுமே நின்று செல்லும். இதேபோல, சென்னை கடற்கரை – திருவண்ணாமலை மெமு ரயில் (06033) வரும் 27-ம் தேதி முதல் கடற்கரை – தாம்பரம் இடையே மெயின் லைனில் இயக்கப்படும். இதனால், எழும்பூர், மாம்பலம், கிண்டியில் மட்டுமே நிற்கும். இந்த 2 ரயில்களும் பூங்கா, கோட்டை ரயில் நிலையங்களில் நிற்காது.

ரயில் சேவை ரத்து: காட்பாடி யார்டில் பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், காட்பாடி – ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் மெமு ரயில் (06417) இரு மார்க்கங்களிலும் வரும் 23, 30-ம் தேதிகளில் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது, என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *