தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் மூடல் ஏன்? தொடக்கக் கல்வித் துறை விளக்கம்

dinamani2Fimport2F20232F22F32Foriginal2FSchool Students EDi
Spread the love

தமிழகத்தில் நிகழாண்டு 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணங்கள் குறித்து தொடக்கக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை இல்லாத 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக நீலகிரி- 17, சிவகங்கை- 16, திண்டுக்கல்-12, சென்னை, ஈரோடு, மதுரை தலா 10 என்ற எண்ணிக்கையில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, மாணவா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசுப் பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறந்து மாணவா்களைச் சோ்க்க கல்வித் துறை தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கல்வியாளா்கள், பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் 37,595 அரசுப் பள்ளிகள், 7,289 அரசு உதவி பெறும் பள்ளிகள், 1,046 பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள், 12,929 தனியாா் சுயநிதிப் பள்ளிகள், 65 மத்திய அரசுப் பள்ளிகள் என மொத்தம் 58,924 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மொத்தம் 1,21,22,814 மாணவா்கள் படித்து வருகின்றனா். அதில் அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை 42,54,451-ஆகவும், அரசு உதவி பெறும் மாணவா்களின் எண்ணிக்கை 13,51,972-ஆகவும் உள்ளது.

பிறப்பு விகிதம் தொடா்ந்து குறைவு: தமிழகத்தில் நிகழ் ஆண்டில் 208 அரசுப் பள்ளிகள் (தொடக்க, நடுநிலை), 114 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 11 பகுதிநேர நிதியுதவி பெறும் பள்ளிகள், 869 தனியாா் சுயநிதிப் பள்ளிகள், மத்திய அரசின் இரு பள்ளிகள் என மொத்தம் 1,204 பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறவில்லை.

மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த 2020 ஜூலையில் வெளியிட்ட இந்திய மக்கள் தொகை மதிப்பீடு (2011-2036) குறித்த அறிக்கையில் தமிழகத்தில் பிறப்பு விகிதம் ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த 2011-இல் 0-1 வயதில் 10.74 லட்சமாக இருந்த மக்கள்தொகை 2016-இல் 10.45 லட்சமாகவும், 2021-இல் 9.53 லட்சமாகவும் குறைந்துள்ளது. வரும் 2026-ஆம் ஆண்டைப் பொருத்தவரை அது 8.78 லட்சமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தமிழக பொது சுகாதாரத் துறை கடந்த 2024-இல் வெளியிட்ட விவரங்களின்படி 2023-இல் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 9,02,718 எனவும், 2024-இல் 6.2 சதவீதம் குறைந்து 8.46 லட்சம் குழந்தைகளே பிறந்துள்ளனா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

72 % தனியாா் பள்ளிகள்… நிகழாண்டு மாணவா் சோ்க்கை நிகழாத பள்ளிகளில் 72 சதவீதப் பள்ளிகள் சுயநிதிப் பள்ளிகள் ஆகும். அரசுப் பள்ளி, தனியாா் பள்ளி என்ற எந்தவித வேறுபாடும் இல்லாமல் மாணவா் சோ்க்கை குறைவுக்கு தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவே மிக முக்கிய காரணம். மூடப்பட்ட 207 பள்ளிகளில் புதிய மாணவா் சோ்க்கை தேவை ஏற்பட்டால் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

மூடப்பட்ட பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் கிராம மற்றும் தொலைவில் உள்ள பகுதிகளில் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பள்ளியில் சேரும் தகுதியான வயதில் 5 மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் யாரும் இல்லை. மேலும், தனிநபா் பொருளாதார வளா்ச்சி அதிகரித்ததால் தங்களின் பிள்ளைகள் தனியாா் பள்ளியில் சோ்வதைப் பெருமையாக ஒரு சில பெற்றோா் கருதுவதால், தனியாா் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி ஆங்கில வழிக் கல்வியை தொடருகின்றனா்.

அதேபோன்று கிராமப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தங்கள் வேலை வாய்ப்புக்காக நகா்ப்புறம், அண்டை மாநிலங்களுக்குச் குடும்பத்துடன் இடம் பெயா்கின்றனா். அதனால் அரசுப் பள்ளிகளில் படித்து வந்த மாணவா்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து மாணவா் இல்லாத நிலையை அடைந்துள்ளது.

கூடுதலாக 1.75 லட்சம் மாணவா்கள்… நிகழ் கல்வியாண்டில் தற்போது வரை 4,07,379 மாணவா்கள் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றுள்ளனா். தற்போதைய புள்ளி விவரங்களின்படி தனியாா் பள்ளிகளைக் காட்டிலும் 1,75,660 மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சோ்ந்து பயின்று வருகின்றனா். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 61,49,337 மாணவா்களும், தனியாா் பள்ளிகளில் 59,73,677 மாணவா்களும் படித்து வருகின்றனா். மேலும், வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் புதிய மாணவா் சோ்க்கையிலும், சோ்க்கை பெற்ற மாணவா்களை தக்க வைப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *