சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில், கோடை காலத்தை போன்று தமிழகத்தில் வெப்பநிலை உயர்ந்த வண்ணம் உள்ளது. பிப்ரவரி மாதத்திலேயே வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த ஆண்டு வெப்ப அலை ஏற்பட்டால் அதை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், வரும் 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலைவழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (பிப்.20) முதல் 25-ம் தேதி வரையிலான 6 நாட்களுக்கு பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்று ஓரிரு இடங்களில்அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து 21, 22, 23 தேதிகளில்ஒருசில இடங்களில் வழக்கத்தைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை அளவுகளின்படி, சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலையாக கரூர் பரமத்தியில் 35.5 டிகிரி, மதுரை மாநகரம், மதுரை விமான நிலையம் ஆகியஇடங்களில் தலா 35 டிகிரி, ஈரோட்டில் 34.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 17 டிகிரி, சேலத்தில் 17.8 டிகிரி, திருப்பத்தூரில் 18 டிகிரி, திருத்தணி, வேலூரில் ஆகிய இடங்களில் தலா 19 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. மலைப் பிரதேசங்களான கொடைக்கானலில் 8 டிகிரி, வால்பாறையில் 10 டிகிரி, உதகையில் 11.2 டிகிரி, குன்னூரில் 12 டிகிரி குளிர் பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்
படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.