அஉதகை: தமிழகத்தில் 2,553 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (ஆக.10) ஆய்வு செய்தனர். கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: “நாட்டில் முதன்முதலாக ஒரு மலைப் பிரதேச நகரில் 700 படுக்கைகள் கொண்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதகையில் அமைந்துள்ளது.
இதை தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட பல வசதிகள் கொண்டதாக இருக்கும். பழங்குடியின மக்களுக்கு பிரத்யேகமாக 50 சிறப்பு படுக்கைகள் கொண்ட பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதய செயலிழப்பை தடுக்கும் வகையில், முதன் முறையாக 14 மாத்திரைகள் கொண்ட அவசரகால மருந்து பெட்டகம் தமிழகத்தில் 2,286 சுகாதார மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
அது இதய நோய் பாதிப்பு ஏற்படுவதை முன்கூட்டியே தடுக்கிறது. இதனால் உடனடியாக உயிரிழப்பை தடுக்க முடியும். தமிழகத்தில் 2,553 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 986 மருந்தாளுனர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களுக்கான கவுன்சிலிங் ஏற்பாடுகள் நாளை தொடங்க உள்ளது. அதேபோல், 1,066 சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கும் பணியும் நடைபெறுகிறது. மதுரையில் ஒரு வழக்கு இருப்பதால், அதை முடித்துவிட்டு விரைவாக சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் 1,336 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இந்த பட்ஜெட்டின்போது பெரிய வாகனங்கள் போகாத இடங்களில் செல்ல 25 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நீலகிரி போன்ற இடங்களுக்கு இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று காலை 20 கி.மீ. கால்நடையாக சென்று 16 சுகாதார மையங்களை ஆய்வு செய்தேன். அங்கு தேவையான மருந்துகள், மாத்திரைகள் இருப்பு உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுகாதார மையங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும், ரூ.377 கோடி மதிப்பில் 32 மருத்துவ கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்திலுள்ள 200 கிராமங்களுக்கு வாகன வசதி இல்லாமல் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதேபோல், கிருஷ்ணகிரி, சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களுக்கு நடந்து சென்று, அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டு தேவையான மருத்துவ வசதிகளை செய்துள்ளோம். பழங்குடியினரிடையே ரத்த சோகை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த ஆய்வு நடத்த ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் செயல்பாடு வெற்றிகரமாக அமைந்துள்ளதால், விரைவில் மதுரை, கோவையிலும் அமைக்கப்படும்,” என்று அவர் கூறினார்
இந்த ஆய்வின்போது, நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, உதகை மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.