தமிழகத்தில் 4 ஆயிரம் ஏரிகள் நிரம்பின: அணைகளின் நீர் இருப்பு 82 சதவீதமாக அதிகரிப்பு | 4000 lakes filled in Tamil Nadu

1343114.jpg
Spread the love

தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதோடு, சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்து வருகிறது. இதனால், 4 ஆயிரம் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. 2,926 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 90 அணைகள், நீர்த்தேக்கங்களில் 82 சதவீதம் நீர் இருப்பு உள்ளது என்று நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஏரிகள் இல்லை. மீதமுள்ள 37 மாவட்டங்களில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 14,140 பாசன ஏரிகள் உள்ளன. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,040 ஏரிகள் இருக்கின்றன. அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் 1,459, மதுரை மாவட்டத்தில் 1,340, புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,132 ஏரிகள் உள்ளன.

மேலும், சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 564, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381, திருவள்ளூர் மாவட்டத்தில் 578 ஏரிகள் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 506, திருவண்ணாமலை மாவட்டத்தில் 697, திருநெல்வேலி மாவட்டத்தில் 780, தென்காசி மாவட்டத்தில் 543, ராமநாதபுரம் மாவட்டத்தில் 639 ஏரிகள் இருக்கின்றன. மிக குறைந்தபட்சமாக மயிலாடுதுறையில் 2 ஏரிகளும், நாகப்பட்டினத்தில் 3 ஏரிகளும் உள்ளன.

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்வதுடன், சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்து வருவதால், ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியதில் முதலிடத்தில் கன்னியாகுமரி (580), இரண்டாவது இடத்தில் விழுப்புரம் (469), மூன்றாவது இடத்தில் தஞ்சாவூர் (384) உள்ளன. 2,926 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதமும், 2,396 ஏரிகளில் 51 முதல் 75 சதவீதமும், 2,194 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதமும், 2,055 ஏரிகளில் ஒன்று முதல் 25 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது.

மாநிலத்தில் 569 ஏரிகளில் நீர் இருப்பு இல்லை. அதாவது ஏரிகளில் தண்ணீர் திறந்துவிடப்படும் பகுதிக்கு கீழே நீர் இருப்பு இருந்தால் அந்த ஏரிகளில் நீர் இல்லை என கணக்கிடப்படுகிறது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 181 ஏரிகளிலும், அதற்கு அடுத்தபடியாக தென்காசி மாவட்டத்தில் 137 ஏரிகளிலும் நீர் இருப்பு இல்லை.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 மண்டலங்களில் மட்டும் மொத்தம் 90 அணைகள், நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 297 மில்லியன் கனஅடி ஆகும். நேற்றைய நிலவரப்படி இவற்றில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 892 மில்லியன் கனஅடி (81.99 சதவீதம்) நீர் இருப்பு உள்ளது என்று நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *