புதுடெல்லி: ரயில் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உட்பட அவற்றின் தரத்தை மேம்படுத்த அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் 71 ரயில் நிலையப் பணிகளுக்கான வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு, ‘தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களை தரம் உயர்த்தும் திட்டம் இருக்கிறதா? அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? அந்த வேலைகள் எப்போது முடியும்’ என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலின் விவரம்: “இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உட்பட அவற்றின் தரத்தை மேம்படுத்த அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின்படி, ரயில் நிலையத்துக்கு வரும் பாதை, சாலைகளை மேம்படுத்துவது, ரயில் நிலையங்களில் வைஃபை, கழிப்பறை, ஓய்வறை வசதிகள் செய்து தருவது, பிளட்பாரங்களின் தரைப்பரப்பை செம்மைப்படுத்துவது, புதிய கட்டடங்கள் கட்டுவது ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தை அமல்படுத்த இந்தியாவில் 1337 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அம்பாசமுத்திரம், அரக்கோணம், அரியலூர், ஆவடி, சின்ன சேலம், சிதம்பரம், ஈரோடு, ஜோலார்பேட்டை, கோவை, காரைக்குடி, மன்னார்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், தாம்பரம், எழும்பூர் உள்ளிட்ட 77 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் 71 ரயில் நிலையப் பணிகளுக்கான வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மதுரை மற்றும் எழும்பூரில் ரயில் நிலையத்தில் பல அடுக்கு கார் பார்க்கிங் வசதி, ராமேஸ்வரத்தில் நுழைவு வாயில்கள் மற்றும் பார்சல் அலுவலகம் புதுப்பிப்பு, எழும்பூரில் புதிய பார்சல் அலுவலகம், பல அடுக்கு கார் பார்க்கிங், காரைக்குடியில் புதிய பயணிகள் காத்திருப்பு அறை, லிஃப்ட் வசதி, அரியலூர் மற்றும் மன்னார்குடியில் புதிய நுழைவு வாயில்கள் அமைத்தல் போன்ற பணிகள் இத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகின்றன.
பயணிகள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பை மனதில் வைத்தும் இயற்கை சீற்றங்களின் இடையூறுக்கு மத்தியிலும் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இந்த தொடர்பணிகளுக்கு விதிக்க முடியாது. ஆனாலும் பணிகளை விரைவுபடுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள் தெற்கு ரயில்வே மற்றும் தென்மேற்கு ரயில்வே மண்டலங்களின் கீழ் வருகின்றன. அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்துக்காக இந்த இரண்டு மண்டலங்களுக்கும் சேர்த்து கடந்த 4 ஆண்டுகளில் 4,313 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 2,506 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது” என்று அவர் பதிலளித்துள்ளார்.