“தமிழகத்தில் 8 மக்களவைத் தொகுதிகளை பறிப்பது மாநில உரிமைக்கு எதிரானது” – முத்தரசன் | CPI state secretary Mutharasan comments on constituency delimitation

1352153.jpg
Spread the love

திண்டுக்கல்: “மக்கள் தொகை குறைவை காரணம் காட்டி தமிழகத்தில் 8 நாடாளுமன்றத் தொகுதியை பறிப்பது என்பது தமிழகத்தின் உரிமையை பறிக்கக் கூடிய செயலாகும்,” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

திண்டுக்கல்லில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளை, தொகுதி மறு சீரமைப்பு என்கிற பெயரால் 31 ஆக குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் 8 நாடாளுமன்றத் தொகுதிகளை தமிழகம் இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும். மக்கள் தொகை அடிப்படையில் என்பது சட்டரீதியாக சரியாக இருக்கலாம்.மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிறது.

ஆகவே, மக்கள் தொகையை குறைக்கவேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை அமல்படுத்தியது. இந்தத் திட்டத்தை கொண்டு வந்தது மத்திய அரசு, இந்த திட்டத்தை தமிழக அரசு முறையாக செயல்படுத்தியது. இதனால் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் மக்கள் தொகை குறைவாக இருக்கிறது. மக்கள் தொகை குறைவை காரணம் காட்டி தமிழகத்தில் 8 நாடாளுமன்றத் தொகுதியை பறிப்பது என்பது தமிழகத்தின் உரிமையை பறிக்கக் கூடிய செயலாகும்.

மத்திய அரசு செய்யக் கூடிய தவறுகளை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்துவதில் எல்லோரையும் காட்டிலும் தமிழக எம்.பி.க்கள் முன்னிலையில் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துவதில் முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.ஆகவே. குரலை ஒடுக்க வேண்டும் என்பதற்காக தொகுதி எண்ணிக்கை குறைப்பதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் மார்ச் 5-ம் தேதி கூட்டத்துக்கு தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். இது வரவேற்றகத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்துகொண்டு மத்திய அரசின் தவறான முடிவுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும். அந்தக் கூட்டத்தில் எடுக்கின்ற முடிவுகளை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன். உடனடியாக இந்தப் பிரச்சினையை கவனத்தில் கொண்டு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *