கடந்த முறையை விட அதிகம்:
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலைக் காட்டிலும் கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் அதிலும் குறிப்பாகச் செலவின பார்வையாளர்களைத் (Expenditure Observers) தமிழகத்துக்கு நியமித்திருக்கிறது தேர்தல் ஆணையம். இந்த எண்ணிக்கை அதிகரிப்பு பின்னல் கெடுபிடிகளை அதிகப்படுத்தத் திட்டமிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையர்கள் சிலரிடம் பேசினோம், “தேர்தல் பார்வையாளர்களில் செலவின பார்வையாளர்களின் பணி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர் ஒருவர் தொகுதியின் அளவை பொறுத்து 28 முதல் 40 லட்சம் வரையிலும் செலவு செய்ய அனுமதி உள்ளது. இந்த குறிப்பிட்ட அளவுக்குள் ஒரு வேட்பாளர் பிரசார கூட்டங்கள், வாகனங்கள், விளம்பரங்கள் செய்யப்படுகின்றனவா என்பதையும், வேட்பாளர்களின் செலவுப் பதிவேடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பு தேர்தல் செலவின பார்வையாளருடையது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டுக்கு 118, மேற்கு வங்கத்துக்கு 122 செலவின பார்வையாளர்களை நியமித்திருந்த நிலையில், இம்முறை மேற்கு வங்கத்துக்கு 100, தமிழ்நாட்டுக்கு 151 செலவின பார்வையாளர்களை நியமித்திருக்கிறது.
தொகுதி அதிகமான மேற்கு வங்கத்துக்குக் குறைவாகவும், தமிழ்நாட்டுக்கு மிக அதிகமாகவும் அதிகாரிகளை நியமித்திருப்பதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. பலமுனை போட்டி நிலவப்போகும் இந்த தேர்தலில் பல்வேறு தொகுதிகளின் பணம், பரிசுப்பொருள் இஷ்டத்துக்கு விளையாடும்.
தேர்தலுக்கு முன்பாகவே ஆளும் தரப்பில் பரிசுப் பொருள்கள் வாரி இரைக்கப்பட்ட நிலையில் அது தேர்தலில் இன்னும் அதிகரிக்கக் கூடம். அதனைக் கட்டுப்படுத்தி இறுக்கிப் பிடிக்கவும், ஆளும் தரப்புக்கு நெருக்கடி கொடுக்கவும் ஒரு ஆயுதத்தை எடுத்திருக்கிறதா என்ற சந்தேகம் தன்னிசையாகவே எழுகிறது.
ஆளும் தரப்பை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் இறுக்கிப் பிடித்துத் தேர்தலை நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும்… செய்வார்களா… என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.” என்றார்கள் விளக்கமாக.