சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள வழக்கறிஞர்கள் புதிய விபத்து குழு காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை நவ. 10-ம் தேதிக்குள் செலுத்துமாறு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்காக ‘999’ என்ற புதிய குழு விபத்து காப்பீட்டுத் திட்டத்தை சமீ்பத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இது தொடர்பாக கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 23 ஆண்டுகளாக பார் கவுன்சில் சார்பில் தனிநபர் விபத்து காப்பீ்ட்டுத் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேஷனல் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயல்படுத்தியுள்ள வழக்கறிஞர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டத்தி்ல் ஆண்டுக்கு ரூ.999 -ஐ பிரீமியமாக செலுத்தினால் இறப்பு அல்லது நிரந்தர பாதிப்பு ஏற்பட்டால் ரூ.25 லட்சம் வரை காப்பீடு பெற முடியும்.
அதேபோல, கை, கால், கண் போன்ற உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டால் ரூ.12.50 லட்சம் வரையிலும், மருத்துவ சிகிச்சை பெற ரூ.3 லட்சமும், சிகிச்சை பெற்று ஓய்வு எடுக்கும்போது 50 வாரங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதமும் உதவித்தொகை பெறலாம். இந்த கூட்டு குழுக் காப்பீட்டுத் திட்டத்தில் வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் இணையதளம் வாயிலாக இணையலாம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய வேண்டும்.
அக். 13 முதல் அடுத்த அண்டு அக். 12 வரை இத்திட்டம் அமலில் இருக்கும். அக். 13 முதல் இந்த குழு விபத்து காப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தில் சேருவதற்கான பிரீமியம் தொகை ரூ.999-ஐ வழக்கறிஞர்கள் வரும் நவ. 10-ம் தேதிக்குள் பார் கவுன்சில் இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக செலுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.