சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட 115 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது.
கேரளா மற்றும் தமிழகத்தில் கடந்த மே 30-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இக்காலகட்டத்தில் அதிகமாக மழை பொழிவு இருக்கும் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் குறிப்பிடும்படியாக மழை பெய்யவில்லை. வடமாநிலங்களில் கடந்த வாரம் வரை கடும் வெயில் வாட்டி வதைத்தது. சில தினங்களுக்கு முன்புதான் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முழுமையாக பரவியது. தற்போது தமிழகம் தவிர்த்து இதர மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
பிற மாநிலங்களில் ஜூன் மாதத்தில் மழை தீவிரமடையாத நிலையில், தமிழகத்தில் பருவமழை தீவிரமாக இருந்தது. இதன் காரணமாக, கடந்த ஜூன் 1 முதல் 30-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 109 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 50 மி.மீ அளவு மழை மட்டுமே கிடைக்கும். இதன் மூலம் கடந்த மாதம் தமிழகத்துக்கு வழக்கத்தை விட 115 சதவீதம் அதிகமாக மழை கிடைத்துள்ளது.
அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 417 சதவீதம், விருதுநகர் மாவட்டத்தில் 292 சதவீதம், திருச்சி மாவட்டத்தில் 249 சதவீதம், கரூர் மாவட்டத்தில் 246 சதவீதம், தேனி மாவட்டத்தில் 238 சதவீதம், ராமநாதபுரம் மாவட்டத்தில் 216 சதவீதம், சென்னை மாவட்டத்தில் 210 சதவீதம், புதுக்கோட்டையில் 201 சதவீதம் மழை பெய்துள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்துள்ள நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் 14 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரிக்கு வழக்கத்தை விட இம்முறை 87 சதவீதம் மழை அதிகமாக கிடைத்துள்ளது.