சென்னை: மற்ற மாநிலங்களை விட தமிழகம் இன்று முன்னேறிச் செல்ல திராவிட இயக்கம்தான் காரணம். ஆரிய ஆதிக்கவாதிகளுக்கு திராவிடம் என்றாலே அலர்ஜி என முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
வனத்துறை அமைச்சர் க.பொன்முடி எழுதிய ‘திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்’ என்ற நூலை நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். நூலை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஒடுக்கப்பட்ட தமிழக மக்களுளின் மேன்மைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் திராவிட இயக்கம். மக்களை அடிமையாக நடத்திய மனுநீதி என்ற அநீதிக்கு எதிராக போராடி வெற்றி பெற்றதுதான் திராவிட இயக்கம். இந்திய துணைக்கண்டத்தில் பிறப்பின் அடிப்படையிலான அமெரிக்காவில் நிறத்தின் அடிப்படையிலுமான அடிமைத்தனத்தை ஒழிக்கத்தான் இங்கு திராவிடர் இயக்கமும், அங்கு கறுப்பர் இயக்கமும் உருவானது.
அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதை ஆரிய ஆதிக்கவாதிகளால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அந்த ஆத்திரத்தை இன்னும் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு திராவிடம் என்ற சொல்லே அலர்ஜியாக உள்ளதை இன்றும் பார்க்கிறோம். ஒருவர் இருக்கிறார். அவர் யாரென்பது உங்களுக்கு தெரியும். சட்டப்பேரவையில் திராவிட மாடல் என்று எழுதிக் கொடுத்தால் பேசமாட்டார். இந்தி மாத விழா நடத்தக்கூடாது என்றால் அந்த விழாவில் திராவிடத்தை விட்டுவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவார்கள். திராவிடர் நல் திருநாடு என்று கூறினால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா, இப்படி கூறினால் சிலருக்கு வாயும், வயிறும் எரியும் என்றால் திரும்பத் திரும்ப திராவிடம் என்று கூறுவோம்.
ஒரு காலத்தில் இடப்பெயராக இருந்த திராவிடம், இன்று ஆரிய ஆதிக்கத்துக்கு எதிரான புரட்சிப் பெயராக மாறியுள்ளது. திராவிடம் என்பது ஆரியத்துக்கு எதிர்ப்பதம் மட்டுமல்ல, அதை பதம்பார்க்கும் சொல். சுயமரியாதை சமதர்ம சமுதாயத்தை அமைக்க நாம் முன்னேறி சென்று கொண்டிருக்கிறோம். மற்ற மாநிலங்களை விட தமிழகம் இன்று முன்னேறிச்செல்ல திராவிட இயக்கம்தான் காரணம். அதன் தாக்கம், அதனால் ஏற்பட்ட நன்மை குறித்து ஆய்வு செய்து இளைஞர்கள் முனைவர் பட்டம் பெற வேண்டும். அவற்றை புத்தகங்களாக வெளியிட வேண்டும். கொள்கைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு உரையாற்றினார். துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.