சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களாக லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக புறப்பட்டு சென்றனர். அரசு பேருந்துகள், ரயில்களில் நேற்றும் கூட்டம் அலைமோதியது. தமிழகம் முழுவதும் இனிப்புகள், பட்டாசு, ஜவுளி விற்பனை அமோகமாக நடைபெற்றது.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் உற்சாகத்துடன் நேற்று தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. பிற்பகலில் சிறிது நேரம் மழைகுறுக்கிட்டாலும், மழை விட்டதும் மீண்டும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜவுளிகடைகள், பட்டாசு கடைகள், இனிப்பகங்கள், பழக்கடைகள், பூக்கடைகளில் தீபாவளிக்கு முந்தைய இறுதிகட்ட விற்பனை அனல் பறந்தது. சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களாகவே பேருந்துகள், ரயில்களில் ஏராளமானோர் புறப்பட்டு சென்றுள்ள நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்றும் பேருந்துகள், ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
கடந்த 3 நாட்களாக சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 28, 29-ம் தேதிகளில் மட்டும் 6,520 பேருந்துகளில் 3.41 லட்சம் பேர் சொந்த ஊர் புறப்பட்டு சென்றுள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. வைகை,பல்லவன், பாண்டியன், உழவன், பொதிகை, திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு புறப்பட்ட விரைவு ரயில்கள், சென்னை சென்ட்ரல் – செங்கோட்டை சிறப்பு ரயில் உள்பட பல்வேறு ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கூட்ட நெரிசலை குறைக்க தாம்பரத்தில் இருந்து மானாமதுரை, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. எழும்பூர் – திருச்சி, தாம்பரம்- திருச்சி, சென்ட்ரல் – போத்தனூர் இடையே முன்பதிவு இல்லாத ரயில்களும் இயக்கப்பட்டன. ரயில்களில் மட்டும் கடந்த 3 நாட்களில் சுமார் 5.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றுள்ளனர்.
ஆம்னி பேருந்துகளில் 3 நாட்களில் 1.77 லட்சம் பேர் சென்னையில் இருந்து பயணம் செய்துள்ளனர். நேற்று பிற்பகல் வரை, சிறு சிறு விதிமீறல்களில் ஈடுபட்ட 594 ஆம்னிபேருந்துகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து அரசு பேருந்து, ஆம்னி பேருந்து, ரயில்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர்.
இதேபோல, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பல லட்சம் பேர் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
சென்னையில் 18 ஆயிரம் போலீஸார் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பட்டாசு தீ விபத்து ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபட அனைத்து மாவட்டங்களிலும் தீயணைப்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.