தமிழகம் முழுவதும் பரவலாக மழை: தினசரி மின் தேவை குறைந்தது | daily power requirement Reduced in Tamilnadu

1332132.jpg
Spread the love

சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், தினசரி மின் தேவை 14 ஆயிரம் மெகாவாட்டாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் தினசரி சராசரி மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது குளிர்காலத்தில் 10 ஆயிரம் மெகா வாட்டாக குறைந்தும், கோடைக்காலத்தில் 20 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்தும் காணப்படும். இந்த ஆண்டு கடந்த மே 2-ம் தேதியன்று தினசரி மின் தேவை 20,830 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக உள்ளது.

ஆண்டுதோறும், அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும், செப்டம்பர் முதல் பல மாவட்டங்களில் மழை பெய்யும். இதனால், அந்த மாதம் மின் நுகர்வு வழக்கத்தை விட குறையும்.

ஆனால், இந்த ஆண்டு செப்டம்பரில் எப்போதும் இல்லாத அளவுக்கு கோடைக் காலத்தைப் போல வெயில் சுட்டெரித்தது. இதனால், மின் நுகர்வு அதிகரித்தது. இதன் காரணமாக, தினசரி மின்தேவை 17,500 மெகாவாட் வரை அதிகரித்தது. மேலும், செப்டம்பருடன் காற்றாலை சீசன் முடிவடைந்ததால், மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் மின்வாரியத்துக்கு சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னையில் ஒரு வாரத்துக்கு முன்பு கனமழை பெய்தது. அத்துடன் மாநிலம் முழுவதும் ஒரு சில மாவட்டங்களைத் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தினசரி மின் தேவை 14 ஆயிரம் மெகா வாட்டாக குறைந்துள்ளது. இதன் மூலம், தினசரி மின் தேவையை மின்வாரியம் எளிதாகப் பூர்த்தி செய்து வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *