தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் அக்.15-ல் மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் | North East Monsoon: Medical camps in 1000 places in TN on October 15 – Minister M. Subramanian

1323327.jpg
Spread the love

சென்னை: “வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வருகிற அக்.15-ம் தேதி, தமிழகத்தில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.சென்னையில் மட்டும் 100 இடங்களிலும், மற்ற 37 வருவாய் மாவட்டங்களில் 900 இடங்களிலும் இந்த மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது,” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று (அக்.8) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழக அரசும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பருவமழையை ஒட்டி மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் என்கின்ற வகையில் பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் எங்கே எல்லாம் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்படுகிறதோ, குறிப்பாக ஒரு தெருவிலோ அல்லது ஒரு ஊரிலோ ஒன்றுக்கும் மேற்பட்ட காய்ச்சல் பாதிப்புகள் இருக்குமானால் உடனடியாக அங்கே மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிட்டு, அந்த வகையில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மக்களைத் தேடி மருத்துவம் எனும், மகத்தான திட்டம் தற்போது வரை ஒரு கோடியே 96 லட்சத்து 77 ஆயிரத்து 571 பேரை சென்றடைந்திருக்கிறது. ஐ.நா சபை மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு United Nation Intergracy Task Force Award 2024 என்கிற விருதினை அறிவித்திருக்கிறார்கள். இந்த விருது கடந்த செப். 25-ம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் 79-வது ஐக்கிய நாடுகள் பொது சபையின் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் மருத்துவ திட்டத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இத்தகைய அங்கீகாரத்திற்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் அனைவருக்கும் இந்த விருதினை தமிழக முதல்வர் அர்ப்பணித்திருக்கிறார்.

மழைக்காலம் என்பதால் மழைக்கால மருத்துவ முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. நான் ஏற்கெனவே சொன்னது போல டெங்கு பாதிப்பு தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது. ஒட்டுமொத்த டெங்கு இறப்புகள் என்பது 2012-ல் 66 இறப்புகளும், 2017-ல் 65 இறப்புகளும் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக மக்கள் நல்வாழ்வுத்துறையின் சிறப்புக்குரிய நடவடிக்கைகள் காரணமாக டெங்கு இறப்புகள் என்பது படிப்படியாக குறைந்திருக்கிறது. தற்போது வரை டெங்கு இறப்பு 7 என்கின்ற வகையில் இருக்கின்றது. இந்த 7 இறப்புகளும் குறித்த காலத்தில் மருத்துவர்களை அணுகாமல் இருந்திருப்பது, காய்ச்சல் வந்தபிறகு மருத்துவமனைக்கு செல்லாமல் தாங்களே சிகிச்சைகள் செய்திருப்பது போன்ற காரணங்களினால் தான் 7 இறப்புகள் ஏற்பட்டிருக்கிறது.

அந்தவகையில் பொதுமக்களுக்கு வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் வேண்டுகோள். காய்ச்சிய நீரையே பருக வேண்டும், வீடுகளை ஒட்டி மழைநீர் தேக்கத்தை சுத்தமாக தவிர்க்க வேண்டும், வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்களில் தேங்கி இருக்கின்ற நீரை உலர்த்தி வைக்க வேண்டும், வீடுகளில் குடம் அல்லது தொட்டிகளில் பிடித்து வைக்கப்படும் நீரை துணி கொண்டு மூடி வைக்க வேண்டும். இப்படி கொசு உற்பத்தியை பெருக்குவதை தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

வருகிற அக்.15-ம் தேதி, தமிழகத்தில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். தமிழகத்தில் கடந்த ஆண்டும் இதே அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. அதேபோன்று இந்த ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதி 1000 இடங்களில் ஒரே நாளில் தமிழகம் முழுவதும், சென்னையில் மட்டும் 100 இடங்களிலும், மற்ற 37 வருவாய் மாவட்டங்களில் 900 இடங்கள் என்கிற வகையில் 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *