கோவை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (நவ.27) தமிழகம் வந்தார்.
புதுடெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்துக்கு இன்று காலை 9 மணிக்கு குடியரசுத் தலைவர் வந்தார். அவரை தமிழக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், முப்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து அவர் ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக கோவையில் இருந்து உதகைக்கு புறப்பட்டுச் செல்வதாக இருந்தது. ஆனால், பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கோவை விமான நிலையத்தில் இருந்து காரில் ஏறி, சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டம் உதகைக்கு புறப்பட்டுச் சென்றார். கோவை பீளமேடு விமான நிலையத்தில் இருந்து காளப்பட்டி சந்திப்பு, மேட்டுப்பாளையம், குன்னூர் வழியாக உதகைக்குச் சென்றடைந்தார். அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் அவரை வரவேற்கின்றனர். தொடர்ந்து உதகையில் உள்ள ராஜ்பவனில் குடியரசு தலைவர் தங்குகிறார். நாளை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில், மேற்கு மண்டல ஐஜி, கோவை சரக டிஐஜி மேற்பார்வையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.