பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க ஓய்வூதியமுறை குறித்த பரிந்துரையினை ஒன்பது மாதங்களில் அரசிற்கு அளித்திட ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அவர்களின் தலைமையில் மூன்று அதிகாரிகள் கொண்ட குழு கடந்த பிப்ரவரி 2025-இல் அரசு அமைத்தது.
பின்னர், உரிய அறிக்கையினை செப்டம்பர் 2025-க்குள் அரசிற்கு அளித்திட இக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டது.
அரசுப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டு அறிந்து ஆய்வு செய்திட, 194 அரசுப் பணியாளர் சங்கங்களுடன் ஒன்பது சுற்றுகள் கூட்டங்களை நடத்தியுள்ளது.
மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) மற்றும் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடன் பல்வேறு கலந்தாய்வுக் கூட்டங்களையும் நடத்தியுள்ளது. துல்லியமான மற்றும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உறுதுணையாக காப்பீட்டுக் கணிப்பாளர் மற்றும் நிதி வல்லுநர்களின் சேவையையும் குழு பயன்படுத்திக் கொண்டது.