தமிழக அரசின் தலைமை காஜி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் | Tamil Nadu government chief qazi passes away

1362845
Spread the love

சென்னை: தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

கற்றறிந்த பேராசிரியரான அவர், தனது சமூகச் சேவைகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார். தன்னுடைய பண்பால் இஸ்லாமிய சமூகத்தினரின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றிருந்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். நான் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலந்தொட்டு, என் மீது பேரன்பு செலுத்தியவர் அவர். மூப்பெய்திய போதும், நான் பங்கெடுக்கும் இப்தார் நிகழ்வுகள் அனைத்திலும் தன்னுடைய உடல்நலன் ஒத்துழைக்கும் வரையில் பங்கேற்பேன் என்று சொல்லிய அவரை இன்று இழந்து வாடுகிறோம்.

அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய மக்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதே போல தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் இஸ்லாமிய சொந்தங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *