தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்பதாக நடிகர் விஜய் புதன்கிழமை தெரிவித்தார்.
சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று நடைபெற்று வருகின்றது.
இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நீட் தேர்வு குறித்து பேசியதாவது:
“நீட் தேர்வால் தமிழக கிராமத்தில் உள்ள ஏழை மாணவர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை. நீட் மாநில உரிமைக்கு எதிராக உள்ளது.
நீட் குளறுபடி நடந்தது அனைவருக்கும் தெரியும். இதன்மூலம் நீட் மீதான நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் இழந்துவிட்டது. நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவை கொண்டு வந்துள்ள தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். காலதாமதம் செய்யாமல் ஒன்றிய அரசு தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.” எனத் தெரிவித்தார்.