எம்ஜிஆர் அதிமுகவை தோற்றுவித்ததற்கு கருணாநிதி அவரை திமுகவிலிருந்து நீக்கியதே முக்கிய மூல காரணமாக முன்வைக்கப்படுகிறது. இதுவே தமிழ்நாட்டின் வெகுஜன கருத்தாகவும் இருந்து வருகிறது.
இதற்கு வலுசேர்க்கும் விதமாக,
“அரசியலில் ஒரு கட்சி தொடங்க வேண்டும், அதற்கு தான் தலைவராக வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் எம்ஜிஆருக்கு இருந்ததில்லை. சினிமாவில் தன் ஆதிக்கம் போய்விடக் கூடாது, அரசியலில் தன் பிடி நழுவிவிடக் கூடாது என்றுதான் அவர் நினைத்தாரே தவிர, முழு நேர அரசியல்வாதியாகச் செயல்பட அவர் விரும்பவில்லை. ஆனால் அவரை வலுக்கட்டாயமாக ஒரு தலைவராக்கியது கருணாநிதிதான்.”
என கண்ணதாசன், அவர் எழுதிய “நான் பார்த்த அரசியல்’ நூலில் கூறியிருப்பதை குறிப்பிடலாம்.
எம்ஜிஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட காரணமாக இருந்த பேச்சு ஏற்கனவே முழுவதும் நிரம்பியிருந்த குவளையை வழிய வைக்க காரணமாகிப் போன கடைசி துளிதான்.
ஒரே கட்சியில் ஒற்றுமையாக இருப்பதாக காட்டிக்கொண்டாலும் அன்றைய கருணாநிதி, எம்ஜிஆர் எனும் இருபெரும் பிரபல ஆளுமைகளுக்கிடையே பல பிரச்சனைகள் இருந்திருக்கின்றன. அவற்றை பற்றியெல்லாம் அன்றைய பத்திரிக்கைகள் அவ்வப்போது எழுதியிருக்கின்றன.
எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்ததற்கு கருணாநிதி ஒரு முக்கிய காரணம் என்பது எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதோ அதே அளவுக்கு,
“அரசியலில் ஒரு கட்சி தொடங்க வேண்டும், அதற்கு தான் தலைவராக வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் எம்ஜிஆருக்கு இருந்ததில்லை.”
எனும் கருத்தும் கேள்விக்குட்படுத்தப்படவேண்டிய ஒன்று!
இதை விவாதிக்க, கருணாநிதி எம்ஜிஆர் ஆகிய இருபெரும் சினிமா மற்றும் அரசியல் ஆளுமைகளை உளவியல் ரீதியாக அணுக வேண்டும் !
– தொடரும்