தமிழக கிராமப் பகுதிகளில் 5,000 நீர்நிலைகளை புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தகவல் | Rs 500 crore allocated for rehabilitation of 5,000 water bodies in rural areas of TN: Minister informs

1308905.jpg
Spread the love

சென்னை: தமிழக கிராமப்புற பகுதிகளில் 5 ஆயிரம் நீர்நிலைகளை புனரமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: “முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, நீர் நிலைகளை தூர்வாரி, மழைநீரை சேகரித்து நீர் மேலாண்மை செய்வதற்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 22,051 சிறுபாசன ஏரிகளில் முதற்கட்டமாக நடப்பாண்டில் ரூ.500 கோடி மதிப்பில் 5 ஆயிரம் சிறுபாசன ஏரிகளை புனரமைக்க தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, சிறுபாசன ஏரிகள் இயந்திரங்களைப் பயன்படுத்தி தூர்வாருதல் மற்றும் ஆழப்படுத்துதல், உபரி நீர்போக்கி (கலிங்கு), மதகு போன்ற அனைத்துக் கட்டமைப்புகளையும் பழுதுபார்த்தல் அல்லது புனரமைத்தல், இணைப்பு வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல் ஆகியவற்றை பொதுமக்கள் பங்கேற்புடன் செயல்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த நீர்நிலைகளை புனரமைப்பதால், நீர்நிலைகளின் கொள்திறன் அதிகரிக்கும். நிலத்தடி நீர் மட்டம் உயரும். வேளாண் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படும்.

உபரி நீர் வீணாவதையும் தடுக்கும். சிறுபாசன ஏரிகளின் கொள்ளளவினை மேம்படுத்தி புனரமைப்பதன் மூலம் வெள்ளம் மற்றும் வறட்சி ஆகிய இரண்டையும் தடுக்கும். பேரிடர் மேலாண்மை முயற்சிகளுக்கு இத்திட்டம் முக்கிய பங்களிப்பு வழங்கும். மேம்படுத்தப்படும் ஏரிகளில் தேவைப்படும் கட்டுமானப் பணிகளான வரத்து மற்றும் போக்குக் கால்வாய், கலிங்கு, மதகு மறுசீரமைக்கும் பணிகள் தேவைப்படின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மேற்கொள்ளப்படும். சிறுபாசன ஏரிகளின் கரைகளை பலப்படுத்தி, பசுமைச் சூழலை ஏற்படுத்த பனை மற்றும் உள்ளூர் வகை மரக்கன்றுகள் நடப்படும்.

இத்திட்டம், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம், சமூக அமைப்புகள், விவசாயிகள் சங்கம், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் சொந்த நிதி ஆதாரம் மற்றும் மக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் மூலமாகவும் மற்றும் மீதமுள்ள சிறுபாசன ஏரிகளுக்கு அரசு நிதி மற்றும் ஊராட்சி அமைப்புகளின் நிதியின் மூலமாகவும் பணிகள் நிறைவேற்றப்படும். ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் பயன்பாட்டாளர் அமைப்புகளுடன் சேர்ந்து சிறுபாசன ஏரிகளின் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் பயன்பாட்டாளர் அமைப்பு இல்லாத பட்சத்தில், புதியதாக பயன்பாட்டாளர்கள் குழுக்கள் அமைத்து புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் மூலம் ஊரகப் பகுதி விவசாயிகள் பெருமளவில் பயன்பெறுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயரும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *