தமிழக கோயில்களின் கும்பாபிஷேக நிகழ்வுகளில் தமிழிலும் மந்திரங்கள் ஓதப்படும்: அரசு தகவல் @ ஐகோர்ட் | Mantras will also be recited in Tamil at Kumbabishekam events of TN temples: Govt

1309900.jpg
Spread the love

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் கும்பாபிஷேக நிகழ்வுகளில் தமிழிலும் மந்திரங்கள் ஓதப்படும் என உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், கஞ்சமலையில் உள்ள சித்தேஸ்வர சுவாமி கோயிலில் வரும் செப்.15 அன்று நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவில் தமிழ் திருமுறைகள் மற்றும் தமிழில் மந்திரங்களை ஓதி குடமுழுக்கை நடத்த உத்தரவிடக்கோரி, சத்யபாமா அறக்கட்டளையின் தலைவரான சத்யபாமா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “கோயில் குடமுழுக்கு நிகழ்வுகளில் தமிழிழும் வேத மந்திரங்களை ஓத வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே உத்தரவிட்டும், அந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்துவதில்லை. இன்னும் பல கோயில்களில் சமஸ்கிருதத்தில் தான் மந்திரங்கள் ஓதப்படுகிறது,” என குற்றம் சாட்டப்பட்டது.

அப்போது அறநிலையத்துறை தரப்பில், “தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடைபெறும் குடமுழுக்கு விழாக்களில் சமஸ்கிருதம் மட்டுமின்றி தமிழிலும் மந்திரங்கள் ஓதப்படுவதாகவும், கஞ்சமலை சித்தேஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவிலும் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும்,” என விளக்கமளிக்கப்பட்டது. அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *