சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில், பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் அப்பாவு தலைமையில் நேற்று நடைபெற்றது. பாஜக, கம்யூனிஸ்ட்கள் தவிர்த்து மற்ற கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். பாமக சார்பில் ஜி.கே.மணி பங்கேற்றார். பின்னர், அப்பாவு கூறியதாவது: அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சட்டப்பேரவைக் கூட்டம் அக்.14 முதல் 17-ம் தேதி வரை நடைபெறும்.
14-ம் தேதி (இன்று) காலை 9.30 மணிக்கு பேரவைகூடியதும், முன்னாள் எம்எல்ஏக்கள் 8 பேர் மற்றும்முக்கிய தலைவர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். 15-ம் தேதி (நாளை) கூடுதல் மானியக் கோரிக்கை பேரவைக்கு அளிக்கப்படும். 16-ம் தேதி விவாதம், 17-ம் தேதி விவாதத்துக்கு பதில் உரை அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.