தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9-ம் தேதி கூடுகிறது: பேரவை தலைவர் அப்பாவு அறிவிப்பு | Tamil Nadu Legislative Assembly to meet on December 9

1341081.jpg
Spread the love

தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9-ம் தேதி கூடுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பதிலுரை அளித்தார். தொடர்ந்து, 19-ம் தேதி தமிழக அரசின் 2024-25-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், 20-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். பட்ஜெட்கள் மீது 22-ம் தேதி வரை விவாதம் நடைபெற்றது.

அதன்பிறகு, துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டன. சட்டப்பேரவை விதிகளின்படி, பேரவையின் ஒரு கூட்டம் முடிவடைந்தால், அடுத்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், வரும் டிசம்பர் இறுதிக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்த வேண்டும்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் என்று பேரவை தலைவர் மு.அப்பாவு நேற்று அறிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் டிசம்பர் 9-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. எத்தனை நாட்கள் கூட்டம் நடைபெறும் என்பது, அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். கூட்ட நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வது தொடர்பாக படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

எனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) குறித்து பேச வாய்ப்பு கிடைத்தது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. மாணவர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும். சட்டப்பேரவையிலும் காகிதம் இல்லாத முறைதான் செயல்பாட்டில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

டிசம்பர் 9-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டம் அநேகமாக 3 நாட்கள் வரை, அதாவது டிசம்பர் 11-ம் தேதி வரை நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை, அரசு ஊழியர்களின் கோரிக்கை, தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி கடும் விவாதத்தில் ஈடுபட எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *