தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: வேங்கைவயல், அண்ணா பல்கலை. வன்கொடுமை விவகாரங்களை கிளப்புகிறது விசிக | TN Legislative Assembly convenes tomorrow

1345866.jpg
Spread the love

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில், வேங்கைவயல், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கான கோரிக்கைகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் நாளை (ஜன.6 திங்கள் கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். நேற்று முன்தினம் ராஜ்பவனுக்கு, பேரவைத் தலைவர் மு.அப்பாவு மற்றும் பேரவை செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் சென்று ஆளுநர் ரவியை சந்தித்து உரையாற்ற வரும்படி முறைப்படி அழைப்பு விடுத்தனர்.

கடந்த 2023 – 24-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது, அரசு தயாரித்து அளித்த உரையில் இடம்பெற்றிருந்த கருத்துகளை விடுத்தும் சிலவற்றை சேர்த்தும் வாசித்ததால் சர்ச்சை எழுந்தது. அதன்பின், சட்டப்பேரவை குறிப்பில் அரசு தயாரித்து அளித்த உரை மட்டுமே இடம்பெறும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு முதல் கூட்டத்துக்கான ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஆளுநர் உரை நிகழ்த்தி முடித்ததும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் வாசிப்பார். அத்துடன் அன்றைய நிகழ்ச்சிகள் முடிவுபெறும். அன்றே, அலுவல் ஆய்வுக்குழு கூடி, ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவெடுக்கும்.

சமீபத்தில் ஈரோடு கிழக்கு உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைந்ததால், ஜன. 7-ம் தேதி அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை வரை 3 நாட்கள் விவாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கூட்டத்தொடரில் பல்வேறு சட்ட முன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், வார்டு மறுவரையறை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் ஊரக உள்ளாட்சிகளை சேர்க்கும் பணிகள் முடிந்த பிறகு நடைபெறும் என அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. எனவே, அதுவரை ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளது. இந்த அவசர சட்டத்துக்கு வரும் பேரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என கூறப்படுகிறது.

இந்த பேரவை கூட்டத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நிச்சயம் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஆளும் திமுகவின் கூட்டணியில் உள்ள விசிக சார்பில் வேங்கைவயல் உள்ளிட்ட பிரச்சினைகளை விவாதிக்கக் கோரி கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவுக்கு சட்டப்பேரவை விசிக கொறடாவும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ அனுப்பியுள்ளார். அதில், கூறியிருப்பதாவது: சட்டப்பேரவை விதி 55-ன் கீழ் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். மானுட சமூகமே வெட்கித் தலைகுனிய வைத்த, வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை 2 ஆண்டுகள் ஆகியும் கண்டுபிடிக்காமல் இருப்பதையும், இது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் நிலை குறித்தும் விவாதிக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக விவாதிக்க வேண்டும். திடக்கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மை துறை என்ற ஒரே துறையை உருவாக்குதல், எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்மானத்தை விவாதத்துக்கு எடுப்பது தொடர்பாக பேரவைத் தலைவர்தான் முடிவெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *