கோவை: “தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நிதியமைச்சராக அல்ல, கட்சி தொண்டராக பணியாற்றுவேன்” என கட்சி நிர்வாகிகள் மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது: ”தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நிதி அமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தபடுகிறது. அந்த சங்கத்தின் தலைவர் விக்கிரம ராஜாவின் மகன் திமுக எம்எல்ஏ-வாக உள்ளார். இன்றைய சூழலில் திமுக மீது மக்கள் மத்தியில் வெறுப்பு நிலவுகிறது. சொத்து வரி, மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு ள்ளன.
எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஒவ்வொருவரும் நீங்கள் வேட்பாளராக இருந்தால் எவ்வாறு செயல்படுவீர்களோ அதுபோல தீவிரமாக செயல் பட வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் உறுப்பினர்கள் தங்கள் பணியை சரியாக செய்திருக்கிறீர்களா என்பதை நினைத்து பார்க்க வேண்டும். ‘எஸ்ஐஆர்’ பணியை சரியாக மேற்கொள்ள வேண்டும். கொளத்தூர் தொகுதியில் 4,379 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தேசிய அளவில் பல்வேறு பிரச்சனைகள் இருந்த போதும் மத்திய நிதியமைச்சர் தமிழ்நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க கவனம் செலுத்தி வருகிறார். திமுக மீண்டும் வரக் கூடாது என மக்கள் நினைக்கின்றனர். அதை செயல்படுத்தி காட்ட வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது: “தமிழகம் முழுவதும் 4 லட்சம் பொறுப்பாளர்கள் உள்ளனர். மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள் வந்துள்ளது என்பதை ஒவ்வொரு அணியும் சொல்லும் அளவிற்கு 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தந்துள்ளார்.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது ‘கியான்’ என்ற பெயரில் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகிய 4 பிரிவுகளில் பணிகளை மேற்கொண்டால் அனைத்து தரப்பினரையும் சென்று சேர்த்து விடலாம் என பிரதமர் கூறினார். ‘கியான்’ என்றால் ஞானம். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி கட்சி பாஜக.
பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை முதல் சட்டமாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இயற்றினோம். நாம் செய்யும் நல்ல திட்டங்களின் மூலம் பொய் பிரச்சாரங்களை தடுக்க முடியும். பிரதமர் மோடி யாருக்கும் குறையின்றி ஆட்சி நடத்துகிறார். ஆனால் அவருக்கு நற்பெயர் கிடைத்து விடக்கூடாத என்ற நோக்கத்தில் தமிழக சட்டப்பேரவையில் நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
ஜல்லிக்கட்டை தடை செய்தது காங்கிரஸ். அதற்கு ஆதரவு தெரிவித்தது திமுக. ஆனால் மீண்டும் அனுமதி அளித்த பிரதமர் மோடியை குற்றம் சாட்டுகிறார்கள். கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசு, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் வேண்டும் என கேட்கிறது. ஆனால் தமிழகத்தில் எதிர்க்கின்றனர். ‘நீட்’ அமலுக்கு வந்தது முதல் எதிர்க்கின்றனர். ஆனால் அந்த தேர்வால் ஏழை கிராமப் புற மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்ப்பு தெரிவிப்பது மூலம் மக்களுக்கான திட்டங்களை திமுக தடுக்கிறது. திமுக-வுடன் கூட்டணி இல்லை என்றால் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாது. தேசியத்தையும் ஆன்மீகத்தை மனதில் வைத்து நடக்கும் கட்சி பாஜக மட்டும் தான். ‘எஸ்ஐஆர்’ திட்டத்தால் சீர்திருத்தம் வருவதை கண்டு ஏன் திமுகவிற்கு அச்சம். எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களது பலவீனத்தை காட்டுகிறது.
பாஜக-வின் தேசிய ஆலோசனையின் பேரில் தான் தமிழகத்தில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணியின் கட்சிகளின் கொடியையும் எடுத்து செல்லுங்கள். கொடி இல்லாவிட்டால் கூட்டணி ஒற்றுமையாக இருப்பதை மக்கள் அறிய மாட்டார்கள். தேர்தல் பணிக்கு கட்சி தொண்டராக நான் பணியாற்றுவேன்” என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இந்நிகழ்ச்சியில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்பட 500-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.