சென்னை: பள்ளி வளாகங்களில் பாலியல் தொந்தரவு செய்பவர்கள் மீது பணிநீக்கம் போன்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வியாளர்கள், பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர், அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், ஈரோடு, சிவகங்கை உட்பட சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான தகவல்கள் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையாகின.
மறுபுறம் மாணவர்களுக்கு பாதுகாப்பாக கருதப்படும் பள்ளிகளிலேயே அரங்கேறும் இத்தகைய சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து பெற்றோர்கள் சிலர் கூறும்போது, ‘‘பள்ளி மாணவிகள் பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. தவறும் செய்யும் ஆசிரியர்கள் மீது பணியிட மாற்றம் அல்லது இடைநீக்கம் போன்ற நடவடிக்கைதான் எடுக்கப்படுகின்றன. இதனால் மீண்டும் அவர்கள் வேறு பள்ளிக்கு சென்று தங்கள் பணியை தொடர்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால் பள்ளிகளின் மீதான நம்பகத்தன்மை கேள்விகுறியாகிவிடும். தவறு இழைப்பவர்கள் பணிநீக்கம் போன்ற கடும் நடவடிக்கைள் எடுக்க வேண்டும்’’என்றனர்.
இது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, “குழந்தைகளை பாதுகாப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமை. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குழந்தைப் பாதுகாப்பு அலுவலர், குழந்தை நல்வாழ்வு அலுவலர் இருக்கிறார். இவர்கள் பள்ளிகளில் சென்று குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உரையாடல் நடத்த வேண்டும். ஆனால், இவர்கள் பள்ளி வளாகத்துக்கு உள்ளேயே வருவதில்லை. அதேபோல், பாதிக்கப்பட்ட குழந்தைகளையே குற்றவுணர்வுக்கு உள்ளாக்கும் வகையில் புகார் சொல்லும் குழந்தைகளிடம் பேசக்கூடாது.
குழந்தைகளுக்கு நம்பிக்கை தரும் வகையில் பள்ளியில் ஆசிரியர்கள் நடவடிக்கைகள் அமைய வேண்டும். அப்போதுதான் தொடக்கத்திலேயே மாணவர்கள் தைரியத்துடன் புகார் தெரிவிப்பர். இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். மேலும், தற்காலிக நடவடிக்கையை விடுத்து நிரந்தரத் தீர்வை நோக்கி தமிழக அரசு நகர வேண்டும்’’என்று தெரிவித்தார் .
முன்னதாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் 13 வயதுள்ள மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். சில மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் 11 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஐஜி.பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் பல்நோக்கு குழுவை அரசு அமைத்து விசாரணைக்கு நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் நலனுக்காக அமைக்கப்படும் கண்காணிப்புக் குழு, மாணவர் மனசு புகார் பெட்டி, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் செயல்பாடுகள் கேள்விக்குறியாக இருப்பதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.