தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தமிழக பாஜக தீவிர களப்பணியாற்றி வருகிறது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வழங்கியுள்ளார். மேலும், மாநில நிர்வாகிகளுடனும் அவ்வபோது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் நயினார் நாகேந்திரன் யாத்திரை மேற்கொண்டுள்ளார். தற்போதுவரை மதுரை, சிவங்கை, செங்கல்பட்டு வடக்கு, வட சென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட பகுதிகளில் யாத்திரையை நிறைவு செய்துள்ளார். தொடர்ந்து, 24-ம் தேதி முதல் பெரம்பூரில் இருந்து மீண்டும் யாத்திரையை தொடங்க இருக்கிறார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார்.
அந்தவகையில், மயிலாப்பூர் தொகுதிக்கு மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், ஆலந்தூர் தொகுதிக்கு நாராயணன் திருப்பதி, வேளச்சேரிக்கு அமர்பிரசாத் ரெட்டி, சேப்பாக்கத்துக்கு நதியா சீனிவாசன், விளவங்கோடு தொகுதிக்கு விஜயதரணி, மதுரை தெற்கு பேராசிரியர் ராம சீனிவாசன், பட்டுக்கோட்டை கருப்பு முருகானந்தம், பண்ருட்டி அஸ்வத்தாமன், திருக் கோயிலூர் ஏ.ஜி.சம்பத், தாம்பரம் கே.டி.ராகவன், திருச்செங்கோடு கே.பி.ராமலிங்கம்உள்பட234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளார்கள், அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்களை நியமித்து நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.