தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தேர்தல் நடைமுறை அறிவிப்பு: அண்ணாமலை, நயினாருக்கு சிக்கல்? | Nomination for the post of state president to be filed tomorrow – Tamil Nadu BJP

1357650.jpg
Spread the love

சென்னை: தமிழக பாஜக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவர்கள், நாளை (ஏப்.11) பகல் 2 மணி முதல் மாலை 4 வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான எம்.சக்ரவர்த்தி கூறியுள்ளார். கட்சியில் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்று தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அண்ணாமலை, நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் நிலவுகிறது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாஜகவின் அமைப்பு பருவ தேர்தல் இறுதிக் கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். கிளை தொடங்கி மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல் முடிந்து தற்பொழுது இறுதியாக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது

மேற்கண்ட தேர்தலுக்கான விருப்பமனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நாளை (ஏப்.11) வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாநில தலைவருக்கான தேர்தல்: மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார். இவரை கட்சியில் தேர்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடம் இருந்து எழுத்துபூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைக்க வேண்டும்.

தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல்: தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன்மொழிய மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிய வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலை, நயினாருக்கு வாய்ப்பில்லை? – தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு, வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. மேலும், மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள், அக்கட்சியில் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்று தகுதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக, தமிழக பாஜகவின் தற்போதைய தலைவர் அண்ணாமலை, அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து எம்.எல்.ஏவாக பதவி வகித்து வரும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *