புதுச்சேரி: மேகேதாட்டு அணை கட்டுமானத்தை தடுக்க தமிழக, புதுச்சேரி அரசுகள் இணைந்து செயல்பட முதல்வர் ரங்கசாமியிடம் காவிரி விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். செவ்வாய்க்கிழமை (செப்.10) தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சரை சந்திக்கின்றனர். அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டவும் நடவடிக்கை எடுப்போம் என சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை இன்று (செப்.9) சட்டப்பேரவையில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவின் விவரம்: “கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் கடலில் கலப்பதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட கர்நாடக அரசு, மேகேதாட்டு அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசை நிர்பந்தித்து வருகிறது.அணை கட்டப்பட்டால் உபரி நீரும் தமிழ்நாட்டுக்கு வருவதை தடுத்து விட முடியும் என்ற உள்நோக்கத்தோடு கர்நாடகா அரசு செயல்படுகிறது. இதனால் அணை கட்டுமானத்தை தடுக்க தமிழக மற்றும் புதுச்சேரி அரசுகள் ஒத்த கருத்தோடு இணைந்து செயல்பட வேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி ஆர் பாண்டியன் கூறியது: “கர்நாடக அரசு 5 அணைகளை சட்டவிரோதமாக கட்டிவிட்டது. உபரிநீரை மட்டுமே தமிழகம், புதுச்சேரிக்கு தருகிறது. கடந்த ஆண்டு தண்ணீர் தராததால் காவிரி டெல்டா பாதிக்கப்பட்டது. தற்போது கர்நாடகா அரசு மேகேதாட்டு அணை கட்ட தீவிர முயற்சி எடுத்து வருவதை அனுமதிக்க முடியாது. தமிழகம், புதுச்சேரியும் இணைந்து செயல்பட வேண்டும். ஒகேனக்கல் அருகே உள்ள ராசிமணல் பகுதியில் அணைக்கட்ட தமிழக அரசு ஏற்கனவே எடுத்த நடவடிக்கை மீண்டும் தொடர வேண்டும்.
மத்திய அரசு அனுமதி தரவேண்டும். இன்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்தோம். தமிழக அரசுடன் இணைந்து செயல்பட கோரினோம். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தார். அதேபோல் முன்னாள் முதல்வர் நாராயணசாமியையும் சந்தித்தோம். அவர், இதில் நியாயத்தை கர்நாடகத்தில் தெரிவிப்பதுடன், ராசிமணல் திட்டத்துக்கு உறுதுணையாக இருப்போம் என்று குறிப்பிட்டார். நாளை (செப்.10) தமிழகத்தின் நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். தேவைப்பட்டால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.