மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ‘டீன்’ நியமனம் திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகிறதா என்று மருத்துவத் துறை வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் வரும் பிப்ரவரி மாதத்துக்குள் 20 டீன்கள் ஒய்வு பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ‘டீன்’ ஆக ரெத்தினவேலு இருந்து வந்தார். அவர், கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஒய்வு பெற்றார். மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதாக கூறி புதிய ‘டீன்’ உடனடியாக நியமிக்கப்படவில்லை. தற்காலிகமாக ‘பொறுப்பு டீன்’ ஆக பேராசிரியர் தர்மராஜ் நியமிக்கப்பட்டார். மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து ஒரு மாதம் ஆகியும் தற்போது வரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு புதிய ‘டீன்’ நியமிக்கப்படவில்லை. இதற்கு முன்பு, இதுபோன்ற காலக்கட்டங்களில் அரசு ராஜாஜி மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைகளுக்கு உடனடியாக புதிய ‘டீன்’ நியமிக்கப்படுவர்.
ஆனால், தற்போது நீண்ட காலமாகியும் ‘பொறுப்பு டீனை’ நியமித்து மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகம் நடத்தப்படுகிறது. சென்னைக்கு அடுத்து தமிழகத்தில் அதிக நோயாளிகள் வரக்கூடிய அரசு மருத்துவமனை, அதிக அறுவை சிகிச்சை நடக்கிற மருத்துவமனை, அதிகமான மருத்துவர்கள், பணியாளர்கள் பணிபுரியக்கூடிய மருத்துவமனையாக அரசு ராஜாஜி மருத்துவமனை இருந்தும், தற்போது வரை ‘பொறுப்பு’ டீனை வைத்து மருத்துவக்கல்வி இயக்குனரகம் சமாளிக்கிறது.
புதிய ‘டீன்’ நியமிக்கப்படாததால் மருத்துவமனையில் நடக்கும் வழக்கமான நோயாளிகள் சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் போன்ற செயல்பாடுகள் மட்டுமே தடைபடாமல் நடக்கிறது. மருத்துவமனையின் முன்னேற்றத்துக்கான திட்டமிடுதல், அதற்கான திட்டங்களை தீட்டுவது, காலிப்பணியிடங்களை நிரப்புவது, புதிய மருத்துவ உபகரணங்கள் வாங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தேக்கமடைந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ராமநாதபுரம், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ‘டீன்’கள் இந்த மாதத்துடன் ஒய்வு பெற உள்ளனர். அந்த ‘டீன்’ காலியிடங்களும் மதுரையுடன் சேர்த்து புதிய டீன்கள் இம்மாத இறுதிக்குள் நியமிக்க வாய்ப்புள்ளது. மேலும், வரும் பிப்ரவரி மாதத்துக்குள் தமிழகம் முழுவதும் 20 மருத்துவக் கல்லூரி ‘டீன்’கள் ஒய்வு பெற உள்ளனர்.
அதற்காக, மருத்துவக் கல்வி இயக்குனரகம், 24 பேர் கொண்ட ‘டீன்’ பேனலை தயாரித்து வருகிறது. இந்த ‘டீன்’ பேனலில் நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றிய துறைத் தலைவர்களும் இடம்பெறுவார்கள். அவர்களை கொண்டு காலியாகும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு புதிய டீன்கள் நியமிக்கப்பட உள்ளது,” என்றார்.