தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுகிறது: ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல் | Necessary legal assistance is provided to TN fishermen: Central govt informs in HC

1333133.jpg
Spread the love

மதுரை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரைச் சேர்ந்த திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “ஒவ்வொரு நாளும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த 9 ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது நான்கு மோட்டார் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தங்களின் வாழ்வாதாரத்தை நடத்துவதற்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் 450 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர், 61 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது கடலோர காவல்துறையினரின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய கடல் எல்லை பகுதிக்குள்தான் மீன் பிடித்துள்ளனர். அவர்களை கைது செய்தது சட்டவிரோதமானது. பிற மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் தாக்கப்படும்போது மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகையில் ஒருதலைபட்சமாகவே செயல்படுகிறது.

எனவே, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களுக்கு சட்ட உதவிகள் வழங்குவதோடு, அவர்களை விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் அமர்வு முன்பாக இன்று (அக்.30) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், “இலங்கை நீதிமன்றத்தில் மீனவர்களுக்கான சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக தூதரகம் மூலமாகவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அரசியல் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *