தமிழக மீனவர்கள் தொடர் கைதை முடிவுக்குக் கொண்டு வர அன்புமணி கோரிக்கை | Anbumani slams sri lankan navy over 21 more Tamil Nadu fishermen arrested

1324200.jpg
Spread the love

சென்னை: தமிழக மீனவர்கள் மேலும் 21 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர்களின் 4 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் பாரம்பரிய உரிமை உள்ள இடத்தில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் 16&ஆம் தேதி மீன்பிடி தொடங்கிய பிறகு இன்று வரையிலான நான்கு மாதங்களில் மட்டும் 425 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 58 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக சேர்த்து தமிழக மீனவர்களின் 196 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இன்றைய நிலையில் மட்டும் இலங்கை சிறைகளில் 131 பேர் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 50 பேர் கடந்த 5-ஆம் தேதி தான் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு முன்பாகவே மேலும் 21 பேரை கைது செய்து சிறைகளில் அடைத்திருக்கிறது இலங்கை அரசு. இதன் மூலம் தமிழக மீனவர்களை கைது செய்து சிறைகளில் அடைப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதை இலங்கை அரசு வாடிக்கையாக வைத்துக் கொண்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இலங்கைக்கு கடந்த வாரம் அரசு முறைப் பயணமாக சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக மீனவர்கள் சிக்கலை கனிவுடன் கையாள வேண்டும்; அவர்களுக்கு கடுமையான அபராதங்களை விதிக்கக்கூடாது; சிறைகளில் உள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன் பிறகும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து கைது செய்வது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும். இவை இனியும் தொடர இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி தீர்வு காணவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *