தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அத்துமீறல்கள்: மத்திய அரசு முடிவு கட்ட முத்தரசன் வேண்டுகோள் | Sri Lankan Government should stop attacks on Tamil Nadu fishermen says Mutharasan

1289225.jpg
Spread the love

சென்னை: இலங்கை அரசு, தமிழக மீனவர்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களுக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நேற்று (01.08.2024) அதிகாலை இலங்கைப் படையின் ரோந்துக் கப்பல் மோதி, தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் கடலில் மூழ்கியுள்ளார்.‌ இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படகில் இருந்த மீனவர்கள் முரட்டுத்தனமான நடவடிக்கை மேற்கொண்டதாக இலங்கை கப்பல் படை அதிகாரி கூறியிருக்கிறார். மேலும் ஆழ்கடல் மீன்வளத்தைத் திருடி செல்வதாகவும், இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழ் மீனவர்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் இலங்கை அரசு சொல்கிறது.

வெறும் நான்கு பேர் இயக்கும் சிறிய படகில் இருந்தவர்கள், ஒரு கப்பற்படையை எதிர்த்து முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக கூறுவது அபத்தமானதாகும். மேலும் அவர்கள் தப்பி ஓடும் போது படகு கவிழ்ந்து விட்டது என்று சொல்வதும் அப்பட்டமான பொய்யாகும். இவ்வளவு சிறிய படகு ஆழ்கடல் மீன் வளத்தை எல்லாம் அள்ளிச் சென்று விடும் என்று சொல்வதும் கட்டுக்கதையே.

இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களை, இந்தியாவின் தமிழ் மீனவர்களுக்கு எதிராக முன்னிறுத்துவது இலங்கை அரசின் சூழ்ச்சியாகும். இருதரப்பு மீனவர்களும் பேசி சுமுகமான உடன்பாட்டுக்கு வருகிறோம் என்று இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்கள் கூறுவதை இலங்கை அரசு பொருட்படுத்துவதே இல்லை.

வழக்கம் போலவே இந்திய அரசாங்கம், டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளை அழைத்து, “தமது அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும்” தெரிவித்ததாகக் கூறியிருக்கிறது. ஏற்கனவே 50 க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடிக் கொண்டுள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 185 விசைப்படகுகள் இன்னும் மீட்கப்படவில்லை. தற்போது நாட்டு படகுகளையும் கவர்ந்து செல்கிறது, அல்லது மோதி மூழ்கச் செய்கிறது. இறந்த மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் தமிழக அரசு நிவாரண வழங்கி இருப்பது பாராட்டத்தக்கது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழக மீனவர் பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டதாக பாஜகவினர் பரப்புரை செய்கின்றனர்.

ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களின் உயிருக்கும் சொத்துக்களுக்கும் இலங்கை கப்பற்படை தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடற் பகுதியில் நிகழ்ந்துள்ளதால், இதைக் கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் என்று மீனவர்கள் கோருவதில் நியாயம் உள்ளது.

இலங்கை அரசாங்கம் தனது கடற்படை மூலம் தமிழக மீனவர்களைத் தாக்கிக் கொலை செய்வதும், கொள்ளை அடிப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் சூழலில், இதைத் தடுப்பதற்கும், முழுமையான தீர்வு காண்பதற்கும் ஒன்றிய அரசு அதிக முன்னுரிமை தந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *