தமிழக மீனவர்கள் 8 பேருக்கு ரூ.9 லட்சம் அபராதம், 16 பேருக்கு காவல் நீட்டிப்பு: இலங்கை கோர்ட் உத்தரவு | Sri Lankan Court Orders Release of 8 TN Fishermen with Fines

1373072
Spread the love

ராமேசுவரம்: சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேருக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதித்தும், 16 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு செய்தும் இலங்கையின் மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற ஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் ஜேசு, அண்ணாமலை, கல்யாண ராமன், செய்யது இப்ராஹிம், முனிஸ்வரன், செல்வம், காந்திவேல் உள்பட 8 மீனவர்களை தலைமன்னார் அருகே இலங்கை கடற்படையினர் ஜூன் 29-ம் தேதி சிறைப்பிடித்தனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றக் காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களின் காவல் இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைந்ததைத் தொடர்ந்து மன்னார் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 8 மீனவர்களுக்கு தலா இலங்கை மதிப்பின்படி தலா ரூ.5 லட்சம் என ரூ.40 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்திய மதிப்பின்படி ரூ.9 லட்சத்து 33 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராத தொகை கட்டிய பின் 8 மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, ஜூன் 30-ம் தேதி அன்று சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்கள், ஜூலை 22-ம் தேதி அன்று சிறைபிடிக்கப்பட்ட 4 மீனவர்கள், ஜூலை 28-ம் தேதி அன்று சிறைபிடிக்கப்பட்ட 5 மீனவர்கள் என மொத்தம் 16 மீனவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *