தமிழக மீனவர் பிரச்சினை: ராகுல் காந்தியை சந்தித்து மீனவ பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கை | Fishermen meet Rahul Gandhi to raise the issue of Tamil Nadu fishermen in Parliament

1292763.jpg
Spread the love

ராமநாதபுரம்: தமிழக மீனவர் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பக் கோரி டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

அகில இந்திய மீனவர் காங்கிரஸின் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில், தமிழக மீனவப் பிரதிநிதிகள் ஜேசுராஜா, சகாயம், எம்ரிட், ராயப்பன், பேட்ரிக் உள்ளிட்டோர் இன்று (ஆக.9) டெல்லி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து, தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பான கோரிக்கை மனுவை வழங்கினர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீனவர்களின் படகுகளும், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களும் மிக எளிதாக விடுவிக்கப்பட்டனர். ஆனால் பாஜக ஆட்சி காலத்தில் கடந்த 2018 முதல் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு படகு கூட விடுவிக்கப்படவில்லை. படகுகள் இலங்கை நாட்டுடமையாக்கப்படுகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 125 மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனே மீட்கப்பட வேண்டும் அல்லது படகு ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.50 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். அமெரிக்க அரசாங்கம் இந்திய இறால்களை தங்கள் சந்தையில் தடை செய்துள்ளது. இது இந்திய மீன்பிடி துறையை கடுமையாக பாதித்துள்ளது. மத்திய அரசு அமெரிக்க அரசுடன் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுடன் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

தமிழக மீனவப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க ராகுல் காந்தி இந்தப் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின்போது அகில இந்திய மீனவர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் டி.என்.பிரதாபன், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் ராஜேஷ் குமார், எம்பிக்கள் விஜய் வசந்த் (கன்னியாகுமரி), ஜோதி மணி (கரூர்), ராபர்ட் ப்ரூஸ் (திருநெல்வேலி), சசிகாந்த் (திருவள்ளூர்) ஆகியோர் உடனிருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *