‘தமிழக வணிகவரித் துறையில் முதல் 3 மாதங்களில் கடந்த ஆண்டை விட ரூ.3,727 கோடி கூடுதல் வருவாய்’ | Rs. 3,727 crore additional revenue in the first 3 months of the Commercial tax department – Minister Moorthy

1276863.jpg
Spread the love

சென்னை: வணிக வரித்துறையில் இந்த நிதியாண்டின் முதல் 3 மாதங்களில், கடந்த நிதியாண்டை விட ரூ.3,727 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாக கூட்டரங்கில், அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், ஜூன் மாதத்துக்கான ஆய்வுக்கூட்டம் இன்று (ஜூலை 9) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் சார்பில் மறைந்த வணிகரின் குடும்பத்தினரான சென்னை மணலியைச் சேர்ந்த சி.உமா மகேஸ்வரிக்கு குடும்ப நல நிதியாக ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது: “வணிகவரித் துறையில் 2024-25 ம் நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் கடந்த நிதியாண்டைவிட ரூ.3,727 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வணிகவரித் துறை நுண்ணறிவுப்பிரிவின் கூடுதல் ஆணையர் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்ட சிறப்பு சோதனையில் ரூ.1,040 கோடி போலி உள்ளீட்டு வரியினை கண்டுபிடித்து போலியான பில் வழங்கிய 316 பதிவுச்சான்றுகளை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரி வருவாயை அதிகப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிலுவையில் உள்ள கோப்புகளை ஆராய்ந்து விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இப்பணிகளை செயல்படுத்த தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் வசதிகளை அரசுக்கு தெரியப்படுத்தலாம். மேலும், தரவுகளின் உண்மை தன்மையைக் கண்டறிய அதிநவீன மென்பொருள்கள் விரைவில் துறையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்” என்று அவர் பேசினார். இந்த கூட்டத்தில், துறையின் செயலர் பிரஜேந்திர நவ்நீத், வணிகவரித்துறை ஆணையர் டி.ஜகந்நாதன், இணை ஆணையர் பொ.இரத்தினசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *