விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் வி சாலையில் அக்டோபர் 27 – ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநாடு நடத்துவதற்கு மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான அனுமதி கடிதத்தை விக்கிரவாண்டி காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் வழங்கியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி கட்சிக் கொடியையும், கொடிப்பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து மாநில மாநாடு விரைவில் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகிலுள்ள வி.சாலையில் செப்டம்பர் 23-ஆம் தேதி மாநில மாநாடு நடத்தப்படும் என்றும், இதற்கு காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதியும், பாதுகாப்பும் வழங்கக் கோரி அந்த கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் கடிதம் அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து காவல்துறை சார்பில் 32 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அவற்றில் 17-ஐ கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, அதற்கு பதிலளிக்குமாறு தெரிவித்திருந்தது. அதற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டிருந்ததப. ஆனால், மாநில மாநாடு நடைபெறுவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் அக்டோபர் 27-ஆம் தேதி மாநில மாநாடு நடைபெறும் என்று தவெக தலைவர் விஜய் வெள்ளிக்கிழமை (செப். 20) அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கடந்த 21-ஆம் தேதி மாலை வந்த தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த். கூடுதல் கண்காணிப்பாளர் வி.வி.திருமாலிடம், மாநில மாநாட்டுக்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு கடிதத்தை அளித்தார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி தீபக் சிவாச், கூடுதல் எஸ்.பி. திருமால் மற்ற துணை கண்காணிப்பாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இதர வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.