ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று உள்ளது. இந்த நிலையில் தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று(12ந்தேதி)முதல் அமைச்சராக பதவியேற்றார்.
பிரதமர் மோடி
மேலும் 24 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் கூட்டணி கட்சியான ஜனசேனா கட்சியின் தலைவர் நடிகர் பவன் கல்யாணுக்கு துணை முதல் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா,ஜே.பி. நட்டா, நிதின் கட்கரி, முன்னாள்துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினி, அவரது மனைவி லதா, முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், முன்னாள் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண், அல்லுஅர்ஜுன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சந்திரபாபு நாயுடு முதல் அமைச்சராக பதவி ஏற்றதும் அவரை பிரதமர் மோடி கட்டித்தழுவி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோர் சேர்ந்த பிரதமர் மோடிக்கு பெருமாள் சிலையை நினைவு பரிசாக வழங்கினர்.
அமித்ஷா கண்டித்தாரா?
முன்னதாக விழா தொடங்குவதற்கு சற்று முன்பு மேடையில் அமர்ந்திருந்த வெங்கையா நாயுடு மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு மரியாதை நிமித்தமாக தமிழிசை சவுந்தரராஜன் வணக்கம் வைத்தபடி கடக்க முயன்றார்.
அப்போது சுதாரித்த அமித்ஷா, தமிழிசை சவுந்தரராஜனை அழைத்து கோபமாக கையின் விரலை உயர்த்தியபடி பேசினார். இதற்கு தமிழிசை விளக்கம் அளித்தார். ஆனால் இதில் திருப்தி அடையாத அமித்ஷா ஏதோ எச்சரித்தபடி பேசினார். இதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் அங்கிருந்து சென்று விட்டார்.
இந்த காட்சிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது. தமிழிசையை அமித்ஷா கடுமையாக எச்சரித்தாக தற்போது இந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது.
ஏற்கனவே தமிழத்தில் பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் போட்டியிட்ட எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இதில் தமிழிசையும் போட்டியிட்டுதோல்வி அடைந்து இருந்தார்.
எச்சரித்து இருக்கலாம்
தமிழகத்தில் பா.ஜனதாவின் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழிசை தனது கருத்தை தெரிவித்து இருந்தார். இது பற்றி கட்சி மேலிடம் விசாரித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அமித்ஷா , தமிழிசையை மேடையிலேயே அழைத்து எச்சரித்து இருக்கலாம் என்று தெரிகிறது.
எனினும் இருவரும் என்ன பேசிக்கொண்டனர் என முழுமையான தகவல் இதுவரை வெளியே வரவில்லை. இது தொடர்பாக தமிழிசையும் எந்த தகவலும் வெளிப்படையாக தெரிவிக்க வில்லை. இதனால் இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது.
இதையும் படியுங்கள்:விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வேட்பாளர் அன்னியூர் சிவா