Last Updated:
மாநிலங்களவையில் கமல்ஹாசன், அண்ணா, பெரியார், காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலை மேற்கோள்காட்டி, தமிழ் மொழிக்கு எதிரான ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்ளும் உறுதியை வலியுறுத்தி பேசியுள்ளார்.
தமிழ் மொழிக்கு எதிராக எந்த ஆக்கிரமிப்புகள் நடந்தாலும் நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள அண்ணா கற்றுக் கொடுத்ததாக மாநிலங்களவையில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து மநீம தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், இன்று மத்திய அரசின் பட்ஜெட் உரையின் மீதான விவாதத்தில் எம்.பி. கமல்ஹாசன் மாநிலங்களவையில் பேசினார். நாடாளுமன்றத்தில் தனது கன்னிப்பேச்சை பேசியுள்ள கமல்ஹாசன், தனது உரையில், அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் மற்றும் மகாத்மா காந்தி உள்ளிட்டோரை மேற்கோள்காட்டி பேசியுள்ளார்.
எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர்களில் ஒருவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை. தமிழன் என்கிற முறையில் எனது கருத்துகளைத் தெரிவிக்கிறேன். தெளிவாக எனது உரையை எழுத பெரியார் எனக்கு உதவி இருக்கிறார். நாடாளுமன்றத்தை நான் புரிந்துகொள்ள அண்ணா எனக்கு உதவினார்.
இந்தியா என்பது மாநிலங்களால் இணைந்த ஒரு நாடு. அதுதான் இந்திய அரசியல் சாசனமும் வகுத்துக் கொடுத்திருக்கிறது. நான் எனது மொழியை எனது ஆசிரியர்கள் வாயிலாக கற்றுக் கொண்டேன். அந்த ஆசிரியர்களில் ஒருவர்தான் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை.
எங்கள் மொழிக்கு எதிரான எந்த விதமான ஆக்கிரமிப்புகள் நடந்தாலும் அதை நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள அறிஞர் அண்ணா எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
1967-ல் எனது கருத்து உருவாக்கத்தில் வழிகாட்டியாக அண்ணா அமைந்தார். அவர் வழிகாட்டிய மையம் என்ற கொள்கையைத்தான் நான் கையில் வைத்திருக்கிறேன். அவர் உரையாற்றிய இதே அவையில் இருந்து நானும் பேசுகிறேன்.
நான் எனது மனதில் மையம் கொண்ட புயலில் இருந்து வரும் வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுகிறேன். இந்த வார்த்தைகள் உங்களில் சிலருக்கு காயத்தை கொடுக்கலாம்.
உங்கள் முன்னால் நிற்கக்கூடிய இந்த நபர் எம்.கே. காந்தி, பெரியார் என்னும் பெரும் ஆசான்களின் பேரனும் அண்ணா என்னும் மாமனிதனின் மகனும் ஆவான்.
நான் பேசும் இந்த உரையை கோபம் இல்லாமல் பேசுவதற்கு காந்தி எனக்கு கற்றுக் கொடுத்தார். புள்ளிவிவரங்களுடன் பேசுவதற்கு பெரியார் கற்றுக் கொடுத்துள்ளார். அண்ணா இந்த பெரும் அவையை புரிந்துகொள்வதற்கு கற்றுக் கொடுத்துள்ளார்” எனப் பேசியுள்ளார்.
“தமிழுக்கு எதிராக எது நடந்தாலும் நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள அண்ணா கற்றுக் கொடுத்துள்ளார்” – கமல்ஹாசன்
