கோவை மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த முத்து, பட்டறை ஒன்றில் வேலை பார்த்துவந்தார். அவருக்கு 23 வயது. திடீரென அவர் தீக்குளித்து உயிழந்தார். உடல் தீயில் கருகி, அனத்தியபடி இருந்த அவர் ஒரு வாக்குமூலம் அளித்தார். அதில், ‘தமிழ் மாணவர்கள் தாக்கப்படக்கூடாது. தமிழினம் வாழ வேண்டும்’ என்று குறிப்பிட்டார். புதுக்கோட்டை அருகே கீரனூரைச் சேர்ந்த முத்து, ‘இந்தித் திணிப்பை நிறுத்துங்கள்’ என்று முதல்வர் பக்தவத்சலத்துக்கு கடிதம் எழுதிவிட்டு, விஷம் அருந்தி உயிரிழந்தார்.
இந்தித் திணிப்புக்கு எதிராக மாணவர்கள் போராடிக்கொண்டிருந்தபோது, ஆசிரியர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அய்யம்பாளையத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியரான வீரப்பன், தன்னுடைய பள்ளி மாணவர்களை இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடச் செய்தார். ‘தமிழைக் காக்க முயற்சி செய்யுங்கள்’ என்று அண்ணாவுக்கு ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு, தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக்கொண்டார் வீரப்பன்.
திருச்சியை அடுத்த விராலிமலையைச் சேர்ந்த சண்முகம் மளிகைக்கடையில் வேலை செய்தார். அவர் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தை நடத்திவந்தார். அவர், அண்ணாவுக்கு ஐந்து கடிதங்கள் எழுதினார். அதில், ‘இந்தப் போராட்டத்துக்காக உயிரைக் கொடுக்கிறோம். தமிழைக் காக்க கடைசிவரை போராடுங்கள்’ என்று எழுதினார். அவர், பூச்சிமருந்தை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார். தமிழுக்காக உயிர்த்தியாகம் செய்த அவரது உடல், சின்னச்சாமியின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
பழைய தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையிலுள்ள ஏ.வி.சி கல்லூரி மாணவர் சாரங்கபாணி பி.காம் முதலாமாண்டு படித்துவந்தார். இந்தி எதிர்ப்புப் போரில் தீவிரமாக ஈடுபட்டுவந்த அவர், தீக்குளித்து இறந்தார்.
1942-ல் நடைபெற்ற ஆகஸ்ட் புரட்சியைவிட, இந்த பிப்ரவரியில் நடைபெற்ற புரட்சி மிகத் தீவிரமாக இருந்தது என்று ஆங்கில ஏடுகள் எழுதின. இந்தி எதிர்ப்புப் போராட்டம் சுமார் 60 நாட்கள் நடைபெற்றன. ‘அதில், அரசின் கணக்குப்படி 65 பேர், பத்திரிகைகளின் கணக்குப்படி 150 பேர் இறந்தனர். ஆனால், எங்கள் கணக்குப்படி 500 பேர் உயிரிழந்தனர்’ என்கிறார் மொழிப்போரில் பங்கெடுத்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.
தாய்மொழியாம் தமிழுக்காக தங்கள் உயிரையே தியாகம் செய்த அந்த மகத்தான தியாகிகளின் குடும்பங்களைத் தேடிச்சென்று நான் சந்தித்தேன். அவர்களின் பரிதாபகரமான நிலையும், அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளும் என்னை உலுக்கியெடுத்தன. அடுத்த பகுதியில் அவற்றை விரிவாகப் பார்ப்போம்.!
– அடுத்த பகுதியுடன் முற்றுப்பெறும்!