தமிழே உயிரே : மொழிப்போரின் வீர வரலாறு – அத்தியாயம் 2 | Series on Anti Hindi imposition part two

Spread the love

சென்னை மாகாணம் முழுவதும் காங்கிரஸின் ஆட்சிதான் நடைபெறுகிறது. அப்படியென்றால், ஒட்டுமொத்த மாகாணத்துக்கும் ஒரே உத்தரவைத்தானே பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இந்தி விருப்பப்பாடம் என்று ஒரே ஆணையில் இரண்டு விதமான விதிகளை சூழ்ச்சியோடு கொண்டுவந்தார்கள்.

‘தமிழர் – தெலுங்கர் பிரிவை இன்னும் அதிகமாக்குவதற்கான சூழ்ச்சி இது’ என்று விமர்சித்த ‘விடுதலை’ ஏடு, ‘கட்டாய ஆரம்பக் கல்விக்குப் பணமில்லை என்று கூறும் சர்க்கார், ஹிந்திக்காக 15 லட்ச ரூபாய் விரயமாக்குவதைப் பொதுமக்கள் எவ்வாறு அனுமதிப்பார்கள்?’ என்று (22.06.1948)) கேள்வி எழுப்பியது.

‘பம்பாய் சென்டினல்’ என்ற ஆங்கில தினசரி ஏட்டில் ஜூன் 4-ம் தேதி தீட்டப்பட்ட தலையங்கத்தில், ‘ஹிந்துஸ்தானியோ, அதற்கு பதிலாகக் கற்பிக்கப்பட வேண்டிய பிற மொழிகளோ, ஆந்திரா, கேரளம், கர்நாடகா – ஆகிய பிரதேசங்களில் முதல் பாரம் முதல் மூன்றாவது பாரம் வரையில் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ராமசாமி நாயக்கரிடமும் அவரைச் சார்ந்த பிறரிடமும் சர்க்கார் இன்னமும் பயந்துகொண்டிருக்கிறது?’ என்ற உண்மையை அதில் உடைத்தது.  

மொழிப்போரின் வீர வரலாறு

மொழிப்போரின் வீர வரலாறு

இரண்டாவது முறையாக இந்தியைத் திணிப்பதற்கான முயற்சியில் காங்கிரஸ் அரசு இறங்கியவுடன், பெரியாரும், அண்ணாவும், தமிழறிஞர்களும், பிற தலைவர்களும், தமிழக மக்களும் கொதித்தெழுந்தனர். சென்னையில் 1948 ஜூலை 17-ம் தேதி நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில், பெரியார், அண்ணா, மறைமலை அடிகள், திரு.வி.க., பாரதிதாசன், ம.பொ.சி., டாக்டர் தர்மாம்பாள், அருணகிரி அடிகள் உள்ளிட்டோர் இந்தித் திணிப்புக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இந்தி எதிர்ப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. பெரியார், அண்ணா, ம.பொ.சி., கி.ஆ.பெ.விசுவநாதம், டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி, சி.டி.டி.அரசு, இராமாமிர்தம் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றனர். சென்னை மவுன்ட் ரோடு, எண் 1, மீரான் சாயபு தெருவிலுள்ள பெரியாரின் இல்லத்தில் ஜூலை 19-ம் தேதி இந்தி எதிர்ப்புக் குழு கூடியது.

அதில் பெரியார் பேசினார். ‘இது மொழிப் போராட்டம் மட்டும் அல்ல. இது ஒரு கலாசாரப் போராட்டம். இது ஒரு மானாபிமானப் போராட்டம். இது ஓர் உரிமை வேட்கைப் போராட்டம். இந்தப் போராட்டத்தின்போது, எந்தவொரு திராவிடனாலும், எந்த ஓர் உண்மைத் தமிழ் மகனாலும் உறங்கிக்கொண்டிருக்க முடியாது. போராட்டத்தைத் தொடங்குவோம். மானமுள்ள மக்களாகப் போராடுவோம். மானத்தோடுப் போராடி மடிந்தாலும் தவறில்லை. நம் சந்ததியர் மேலும் வீரத்தோடு போராடி நாம் விட்டுச்செல்லும் பணியை நிறைவேற்றுவார்கள். மானத்துக்கும் வீரத்துக்கும் பேர் போனவர்கள் திராவிடர்கள். எனவே, இந்தப் போராடத்தைக் ஒருபோதும் கைவிடாதீர்கள். குண்டு பட்டு இறந்தீர்கள் என்றாலும், குண்டு மார்பில் பாய்ந்திருக்கட்டும்’ என்றார் கர்ஜித்தார் பெரியார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *