தமிழ்குமரன் காங்கிரஸில் சேர்ந்தது முதல் பாமக-விலிருந்து நீக்கப்பட்டது வரை! – நடந்தது என்ன?

Spread the love

குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்னையால் இரண்டாகப் பிளவுபட்ட பாமக-வில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது.

அன்புமணி, ராமதாஸ், ஜி.கே.மணி

அதே நேரம், டாக்டர் ராமதாஸ் தலைமையிலான அணியோ திமுக, அதிமுக, தவெக என கூட்டணியில் சேர முயற்சித்தும் எதுவும் நடக்காத நிலையில், சசிகலா தொடங்கிய கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

சசிகலாவுடனான கூட்டணிக்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், ஜி.கே.மணி உள்ளிட்ட சில நிர்வாகிகள் ராமதாஸின் முடிவுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் ஜி.கே.மணியின் மகனும், பாமக இளைஞர் சங்கத் தலைவருமான தமிழ்குமரன், காங்கிரஸில் இணந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

தான் வெற்றி பெற்ற பென்னாகரம் தொகுதியில் மகன் தமிழ்குமரனை நிறுத்தலாம் என்று ஜி.கே.மணி திட்டமிட்டிருந்ததாகவும், பாமக பிளவுபட்ட சூழலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் பலமாக உள்ளதால், சசிகலா கட்சிக் கூட்டணியை நம்பி போட்டியிடுவது வெற்றியைத் தராது என்பதால் இந்த தேர்தலில் மகனை நிறுத்தலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

தமிழ்குமரன்
தமிழ்குமரன்

இந்த நிலையில்தான் தன்னுடைய தொடர்புகள் மூலம் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் தமிழ்குமரன். ஐந்து மாதங்களுக்கு முன்புதான் பாமக இளைஞர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை தமிழ்குமரனுக்கு ராமதாஸ் வழங்கியிருந்தார். ஜி.கே.மணி குடும்பத்தினருக்கு டாக்டர் ராமதாஸ் அதிக முக்கியத்துவம் கொடுத்ததும்தான், பாமக-வுக்குள் பிரச்னை வர காரணம் என்றும் சொல்லப்பட்டது.

தற்போது காங்கிரஸில் இணந்துள்ள தமிழ்குமரன், பென்னாகரத்தில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து பாமக இளைஞர் சங்க தலைவர் பொறுப்பு உட்பட கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தமிழ்குமரனை நீக்கி, டாக்டர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்குமரன் காங்கிரஸில் சேர்ந்தது, அதன் மூலம் தொகுதியைப் பெறவுள்ளது எல்லாம் ஜி.கே.மணிக்குத் தெரியும் என்று சொல்லப்படும் நிலையில், தற்போது டாக்டர் ராமதாஸ் தன் மகன் மீது எடுத்துள்ள நடவடிக்கையின்போதும் ஜி.ஜே.மணியும் உடன் இருந்துள்ளார்.

இது ராமதாஸ் தலைமையிலான பாமக முகாமில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *