தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு | Chennai High Court orders cancellation of tn Football Association elections

1368955
Spread the love

சென்னை: தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கால்பந்தாட்ட சங்கத்துக்கு தேர்தல் நடத்திய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை அதன் நிர்வாக குழு சங்கத்தை நிர்வகிக்க வேண்டும் என கடந்த 2023-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதையடுத்து, 2025 மே மாதம் தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்துக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதில், 22 உறுப்பினர்களுடன் சென்னை, திருநெல்வேலி, கோவை மற்றும் திருச்சியை சேர்ந்த 4 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். தேர்தல் நடைபெறுவதற்கு முன் முறைகேடாக 4 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டது ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது என பல்வேறு மாவட்ட கால்பந்தாட்ட சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், என்.செந்தில்குமார் அமர்வு, ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தேர்தலுக்கு முன் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. தேர்தல் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற விதிகளுக்கு எதிராக தேர்தல் நடைபெற்றிருப்பதால் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதனால், மே மாதம் நடைபெற்ற தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை இறுதி செய்து, உறுப்பினர்களுக்கு எதிரான ஆட்சேபனைகளை ஒரு வாரத்தில் தெரிவிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும்.

உறுப்பினர்களின் குறைகளை தனித்தனியாக பெற்று நிர்வாக குழு நடவடிக்கை எடுக்க முடியாது. அதனால், அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து கூட்டம் நடத்தி அவர்களின் கோரிக்கைகளை கேட்க வேண்டும். அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். உறுப்பினர்கள் பட்டியல் தயாரிப்பு பணிகளை ஜூலை 21-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

பின்னர், தேர்தல் நடைமுறைகளை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடித்து, அதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை செப்.1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *