தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் திமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியிருக்கிறது என்று கடுமையாகச் சாடுகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தவெக சார்பாக நடத்தப்பட்ட சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில், கலந்துகொண்ட ஆற்காடு இளவரசரின் மூத்த மகனும் இளவரசருக்கு திவானுமான நவாப் ஜாதா முகமது ஆசிப் அலி, `தமிழ்நாடு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான மாநிலம்” என்று பேசியிருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்…
“விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் நீங்கள் பங்கேற்கக் காரணம் என்ன?”
“ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ் என எந்த ஒரு மத விழாவாக இருந்தாலும், அழைப்பு வந்தால் எங்கள் குடும்பம் அதில் பங்கேற்போம். நான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும், பள்ளி மற்று கல்லூரியை கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களில் படித்தவன். என் மகனுக்கு ஜீசஸ் பெயரான ஈஷா என்று பெயரிட்டுள்ளேன். மதங்களைக் கடந்த ஒற்றுமையைப் பேண வேண்டும் என்று நினைப்பவன் நான். அதனடிப்படையிலேயே, விஜய் நடத்திய கிறிஸ்துமஸ் விழாவிற்கு மத நல்லிணக்கம் குறித்துப் பேசுவதற்காக ஒரு பேச்சாளராக என்னை அழைத்தார்கள்.”