தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் விதிமுறைகளை மீறி சிண்டிகேட் உறுப்பினர் நியமிக்கப்பட்டிருப் பதாக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரு பல்கலைக்கழகத்தின் முக்கிய நிர்வாக அமைப்பாக ஆட்சிமன்றக்குழு (சிண்டிகேட்) திகழ்கிறது. கல்வி மற்றும் நிர்வாகம் தொடர்பான முடிவுகள், செலவினங்கள், புதிய திட்டங்கள் போன்றவற்றுக்கு சிண்டிகேட் குழுவில் விவாதித்து ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
மாநில அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் வேந்தரான ஆளுநர் தரப்பிலும் அரசு சார்பிலும் துணை வேந்தர் மற்றும் சிண்டிகேட் குழு வாயிலாகவும் சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமிக்கப் படுகின்றனர். சிண்டிகேட் உறுப்பினர் குழுவால் நியமிக்கப்படும் 2 உறுப்பினர்களில் ஒருவர் தொலைதூரக் கல்வியில் அனுபவமிக்கவராகவும், மற்றொருவர் ஊடகத் துறையைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் என்பது பல்கலைக் கழக விதிமுறை.
இந்நிலையில், சிண்டிகேட் குழு மூலம் நியமிக்கப்பட்ட 2 உறுப்பினர்களில் ஒருவரான ஜி.அர்ஜுனன் என்பவர் தனது உறுப்பினர் பதவியை கடந்த அக்.8-ம் தேதி ராஜினாமா செய்து பல்கலைக் கழகத் துணை வேந்தரான எஸ்.ஆறுமுகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தை அக்.13-ம் தேதி ஏற்றுக்கொண்டதுடன் அன்றைய தினமே எம்.மதிவாணன் என்பவரை சிண்டிகேட் உறுப்பினராக 3 ஆண்டு காலத்துக்கு நியமித்து துணை வேந்தர் ஆணையிட்டுள்ளார். மதிவாணன் சென்னை பல்கலைக்கழகத்தில் பொறுப்பு பதிவாளராகப் பணியாற்றியவர்.
பல்கலைக்கழக விதிமுறையின்படி, சிண்டிகேட் உறுப்பினரின் ராஜினாமா கடிதம் வேந்தரான ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, அவர் அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டால் மட்டுமே உறுப்பினர் பதவி காலியாக இருப்பதாகக் கருதப்படும். அதோடு சிண்டிகேட் உறுப்பினர் ராஜினாமா செய்யும் நிலையில் அவரது எஞ்சிய பணிக்காலம் 6 மாதத்துக்கு மேல் இருந்தால் மட்டுமே புதிய உறுப்பினரை நியமிக்க முடியும்.
ஆனால், உறுப்பினர் ராஜினாமா ஏற்கப்பட்ட விஷயத்திலும், புதிய உறுப்பினர் நியமனத்திலும் விதிமுறைகள் முற்றிலுமாக மீறப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுத்துள்ளது. சிண்டிகேட் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த அர்ஜுனனின் எஞ்சிய பதவிக்காலம் 4 மாதங்களுக்கு குறைவாக உள்ள நிலையில் துணைவேந்தர் அவசர அவசரமாக புதிய உறுப்பினரை அதுவும் 3 ஆண்டு காலத்துக்கு நியமித்திருப்பது பல்கலைக்கழகத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இச்சூழலில், சிண்டிகேட் கூட்டம் நவ.13-ம் தேதி நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பல்கலைக்கழக விதிமுறைகளை மீறி புதிய சிண்டிகேட் உறுப்பினரை நியமித்துள்ள துணைவேந்தர் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். துணை வேந்தர் ஆறுமுகத்தின் 3 ஆண்டு பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.