பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார். அதில், பெரும்பாலான தரப்பின் ஆதரவையும், எதிர்ப்பையும் பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை கடந்த 2000-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்தது. அதை வடிவமைக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ல் அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு, கல்விக் கொள்கைக்கான 520 பக்க வரைவு அறிக்கையை 2023 அக்டோபரில் வடிவமைத்தனர். தமிழக அரசிடம் அறிக்கையை 2024 ஜூலை 1-ல் சமர்ப்பித்தனர். அதன், ஓராண்டுக்குப் பிறகு இப்போது பள்ளிக் கல்விக்கான கல்விக் கொள்கை 2025 வெளியிடப்பட்டிருக்கிறது.
தேசிய கல்விக் கொள்கையில், தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் விருப்ப மொழியாக ஏதேனும் ஒரு இந்திய மொழி என மும்மொழிக் கொள்கை இடம்பெற்றுள்ளது. ஆனால், தமிழ்நாடு கல்விக் கொள்கையில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே கொண்ட இருமொழிக் கொள்கை இடம்பெற்றுள்ளது.
கல்வி என்பது பொதுப் பட்டியலில் நீடிக்கும் என்று தேசியக் கல்விக் கொள்கை கூறும் நிலையில், கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. 3, 5, 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை பரிந்துரைக்கும் தேசிய கல்விக் கொள்கை 3, 5, 8-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாவிட்டால், மறுதேர்வு கட்டாயம் என்கிறது.
ஆனால், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையோ, நலன் கருதி, பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை உறுதிசெய்ய வேண்டும் என்கிறது. 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை என்பது ட்ராப் அவுட் என்று சொல்லக் கூடிய மாணவர்களின் இடைநிற்றலை வெகுவாக தடுக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
அதேபோல், 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை என்றாலும், ‘பள்ளிகளில் 1, 2, 3-ம் வகுப்பு மாணவர்கள் வயதுக்கேற்ப படித்தல், எழுதுதல், எண்ணறிவு திறன்களை அடைவதை உறுதி செய்ய இயக்கம் சார் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், மாணவர்களின் திறன்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க, பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு தொடர் இடைவெளிகளில் மாநில அளவிலான ‘ஸ்லாஸ்’ எனும் கற்றல் அடைவு தேர்வு நடத்தப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் எளிதில் அணுகும் வகையில் பாடப் புத்தகங்களை மாற்ற வேண்டும். முதல் தலைமுறை கற்போர், பழங்குடியினர், பெண் குழந்தைகளை பள்ளியில் தக்கவைக்கவும், அவர்களது கற்றல் விளைவுகளை முன்னேற்றவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
தொடக்க நிலை முதல் மேல்நிலை வகுப்புகள் வரை குறைந்தபட்சம் வாரத்துக்கு 2 உடற்கல்வி பாடவேளைகள் இருப்பதை கட்டாயமாக்க வேண்டும். ‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டத்தின் கீழ் வட்டார அளவில் சிறந்த 500 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, மாதிரி பள்ளிபோல கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் கவனத்துக்கு உரியவை.
‘மும்மொழிக் கொள்கைக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவை பார்த்து பயந்து, அவசரகதியில் தேசிய கல்விக் கொள்கையை பிரதி எடுத்து மாநிலக் கல்விக் கொள்கையாக திமுக அரசு வெளியிட்டிருக்கிறது’ என்று விமர்சித்துள்ளார், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
அதேபோல், ‘தனியார் பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கை கூறியபடி, மூன்றாவது மொழி இருப்பதை திமுக அரசு ஏற்றுக்கொள்கிறதா? அரசுப் பள்ளி மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?’ என்று ஆவேசமாக கேள்வி எழுப்பி இருக்கிறார் தமிழக பாஜக மூத்த தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன்.
அதேவேளையில், விசிக பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி. வெளியிட்ட கருத்து ஒன்று கவனிக்கப்பட வேண்டியது. மாநிலக் கல்விக் கொள்கையில் பிளஸ் ஒன் பொதுத் தேர்வை ரத்து செய்தது தவறான முடிவு. இது உயர் கல்வியின் தரத்தையும், தொழிற்கல்வியின் தரத்தையும் கெடுத்துவிடும். இந்த முடிவை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், 10, பிளஸ் 1, பிளஸ் 2 என தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுதுவதால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டு பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு என்று கல்வியாளர்கள், ஆசிரியர்களில் பலரும் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆதரவும் எதிர்ப்பும் ஒருபுறம் இருக்க, தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை குறித்து அதன் வடிவமைப்பு குழுவில் இடம்பெற்ற சிலரே அதிருப்தி தெரிவித்துள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும். இது குறித்து அவர்கள் கூறும்போது, “தமிழக அரசிடம் நாங்கள் சமர்ப்பித்து ஓராண்டு தாமதத்துக்கு பிறகு, தற்போது மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இது, நாங்கள் அளித்த அறிக்கையில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
நாங்கள் பரிந்துரை செய்யாத பல அம்சங்கள் இதில் உள்ளன. பெரிய அளவில் தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் இல்லாமல், தமிழக அரசின் தற்போதைய திட்டங்கள், செயல்பாடுகள் என கிட்டத்தட்ட மானியக் கோரிக்கைபோல உள்ளது. உயர் கல்வியை விட்டுவிட்டு, பள்ளிக் கல்விக்கு மட்டும் தனியாக கல்விக் கொள்கை வெளியிட்டதற்கான காரணமும் தெரியவில்லை.
கல்விக் கொள்கை வடிவமைப்புக்காக தீவிரமாக உழைத்தும், எங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. வெளியீட்டு விழாவுக்கு கூட எங்களை அழைக்கவில்லை” என்ற தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பு குழுவின் சிலரது ஆதங்கமும் உற்று கவனிக்கத்தக்கது.